வெறும் பச்சை மிளகாய் வைத்து மூன்று நண்பர்கள் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பித்து கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை.
இன்றைய இளைஞர்கள், 9 மணி முதல் 6 மணி வரை அலுவலகத்தில் வேலை செய்யும் விதிமுறைகளை மாற்றி, புதிதாக ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். இளைஞர்கள், புதிய ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில், மும்பையில் உள்ள மூன்று நண்பர்கள் சதீஷ், அர்ஜூன் மற்றும் மிகைல் ஆகிய மூவரும் பச்சை மிளகாயை மூல ஆதாயமாக கொண்டு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, இன்று வெற்றியுடன் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, “நாகின்” என்ற ஒரு நிறுவனத்தை அவர்கள் தொடங்கினார்கள். நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு, இவர்கள் சின்ன சின்ன சந்திப்புகளில் தங்களுடைய ஐடியாக்களை வெளிப்படுத்தினார்கள். மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் கொண்ட சதீஷ் மற்றும் அர்ஜூன், உணவுத்துறையில் அனுபவம் கொண்ட மிகைல் ஆகிய மூவரும் இணைந்ததை அடுத்து, அவர்களுக்குள் மிக எளிமையான புரிதல் ஏற்பட்டது.
இந்தியாவில் உணவு என்பது ஒரு கலாச்சாரமாக மதிக்கப்படுகிறது. அதிலும் காரமான உணவை பலரும் விரும்புகிறார்கள். இந்த நிலையில், காரத்தை மிகவும் இயற்கையானதாகவும், வித்தியாசமான சுவையுடன் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அந்த ஐடியாவில் இருந்து தான் “நாகின்” என்ற நிறுவனம் தோன்றியது. இவர்கள் தேர்ந்தெடுத்த முக்கிய காய்கறி பச்சை மிளகாய். இதிலிருந்தே சாஸ் தயாரிக்க வேண்டும் என்றும், அந்த சில்லி சாஸ் அனைத்து உணவுகளுக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
பச்சை மிளகாயிலிருந்து “Original”, “Kantha Bomb”, “Smoky Bhoot” மற்றும் “The 65” போன்ற சாஸ்கள் தயாரிக்கப்பட்டன. இவை சைவ, அசைவ உணவுகளுக்கு ஏற்றதாகவும், பழைய சோறு முதல் பிரியாணி வரை அனைத்துக்கும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தன. பத்து வினாடிகளில் இந்த சாஸ் உணவில் கூடுதல் சுவை சேர்க்கும் என்றும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர்.
ஆரம்பத்தில், நாகின் பிராண்டை மார்க்கெட்டிங் செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் வாய்மொழி விளம்பரங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் வளர்ந்தது.
ஆரம்பக் கட்டத்தில், மக்கள் இதை பரிசோதனையாக சோதித்து பார்த்தனர். சுவை நன்றாக இருப்பதை உணர்ந்ததும், தொடர்ந்து வாங்க தொடங்கினர்.
இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் செயற்கையாக எந்த பொருளும் சேர்க்கப்படாமல், நிஜமான தரமான பச்சை மிளகாய் மட்டுமே சாஸ்களுக்கு பயன்படுத்தப்படுவது. இதுதான் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து, அவர்களுக்கு நல்ல விலை கொடுத்து மிளகாய் வாங்கினர். அதன் பிறகு, அந்த மிளகாய்கள் சாஸாக மாற்றப்பட்டன.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக, இவர்களுக்கு முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்வந்தன. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலருக்கு மேல் இந்நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது என்பதும், அபிஷேக் பச்சன் உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் சில்லறை கடைகளில் விற்பனை தொடங்கிய நிலையில், பின்னர் மொத்த விற்பனையாக மாறியது. தற்போது, ஏழு நாடுகளுக்கு இவர்கள் தயாரிக்கும் சில்லி சாஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஜூன் மாதத்தில், நாகின் நிறுவனம் ₹17.5 கோடி டர்ன் ஓவரை பெற்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரணமாக சில்லி சாஸ் என்றால், அது முழுக்க முழுக்க செயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் இந்த நண்பர்களின் “நாகின் சாஸ்”, முழுக்க முழுக்க ஒரிஜினல் பச்சை மிளகாயிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்டதால், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவகத்திலும் இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.