ஜம்மு & காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஷுக்ரு கெல்லர் என்ற பகுதியில் இன்று காலை நடந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்பு படைகள் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சுட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த நம்பத்தகுந்த உளவு தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படைகள் முற்றுகை மற்றும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தன. காஷ்மீர் மண்டல ஐ.ஜி. தனது குழுவுடன் மோதல் நடந்த இடத்திற்கு வந்துள்ளார்.
பயங்கரவாதிகளிடம் இருந்து 3 ஏ.கே. சீரிஸ் துப்பாக்கிகள், 7 ஏ.கே. துப்பாக்கி மேகசின்கள், 2 கைகுண்டுகள், வெடிகுண்டுப் பைகளை பாதுகாப்பு படைகள் கைப்பற்றியுள்ளன.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சோபியான் பகுதியில் உள்ள ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவுக்கு கிடைத்த உளவுத்தகவல் அடிப்படையில் இந்திய இராணுவம் தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆபரேஷன் கெல்லர் என்ற இந்த நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் முதலில் துப்பாக்கி சூட்டை தொடங்கினர், அதற்குப் பிறகு கடும் மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்,” என இந்திய இராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்கமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பிடிக்க உதவும் தகவலுக்காக, ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை சோபியான் பகுதிக்குள் போஸ்டர்களை ஒட்டியுள்ளது. தகவல் கொடுப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியத்துடன் கையாளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.