விடாம நாம இருமுனாலே ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி குழந்தைங்க இருமுனாங்கன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்? வாங்க அதுக்கு என்ன மருந்து எப்படி தயாரிக்கறதுன்னு பார்ப்போம்.
நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம்.
பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்ப்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்.
காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும். பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காச நோய் (Primary Complex – Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம்.
புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்துகொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும்.
அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம்.
மருந்தை விரைவாகப் பணிபுரிய வைக்கவும், நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். இதை மனதில்கொள்வது நல்லது