அட்சய திருதியை ஏப்ரல் 30ம் தேதி வருகிறது. இந்த இனிய நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். தங்கம் விற்கிற விலைக்கு எவன் வாங்க முடியும் என அங்கலாய்க்கிறீர்களா? அதுக்குப் பதிலா வேறு ஒன்றும் வாங்கலாம். அதுவும் தங்கத்துக்குச் சமமான பலனைத் தரும். இந்த இனிய நாளில் நாம் அன்னதானம் உள்பட பிற தானங்களும் செய்வது நல்ல பலனைத் தரும். அது பற்றி பார்க்கலாமா…
அட்சய திருதியை நாளில், பொன்னும் பொருளும் வாங்கவேண்டும் என்கிறார்களே என்பதுதான் பலரின் கேள்வி. உண்மையில்… அந்தநாளில், அட்சய திருதியை நாளில், உப்பு வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் கடாக்ஷத்துடன் திகழும் என்பதை அடுத்தடுத்த காலகட்டத்தில் நீங்களே உணருவீர்கள்.
அதேபோல்… நாம் இந்த நாளில் செய்யவேண்டியது… தானம். அட்சய திருதியை நாளில்., தானம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது சாஸ்திரம். முடிந்தவர்கள், தங்கமோ வெள்ளியோ ஆச்சார்யர்களுக்கு தானமாக வழங்கி நமஸ்கரிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு, நம்மால் முடிந்த தாலியோ தாலியில் கட்டிக்கொள்ளும் காசோ வழங்கலாம்.
’தங்கத்துக்கும் வெள்ளிக்கும் எங்கே போறது’ என்று அலுத்துக்கொள்கிற மிடில்கிளாஸ் அன்பர்கள், எவருக்கேனும் குறிப்பாக வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். இன்னொருவருக்கு செருப்பு வழங்குங்கள். வீட்டு வாசலில் ஒரு பானை வைத்து ஜில்லென குடிநீர் வழங்குங்கள். ‘அடிக்கிற வெயிலுக்கு ஒரு மோர் கொடுத்தா நல்லாருக்குமே’ என்று நினைத்தால், நீர்மோர் வழங்குங்கள், இனிப்பும் குளுமையும் தருகிற பானகம் வழங்குங்கள்.