வாழை திரைப்படம் எப்படி இருக்கு? வலியை அழுத்தமாகப் பதிவு செய்த மாரிசெல்வராஜ்

By John A

Published:

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களுக்கு அடுத்து மாரிசெல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் வாழை. டிஸ்னிஹாட் ஸ்டாருடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை. தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ள கொடிக்குளம் கிராமத்தில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்து மாரி செல்ராஜ் இயக்கியிருக்கிறார்.

பெரும்பாலும் மாரி செல்வராஜின் படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும். வாழையும் இதை செவ்வனே செய்திருக்கிறது. கொடிக்குளம் கிராமத்தில் சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த பொன்வேல் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். ஏழ்மையான நிலையிலும் படிப்பில் கெட்டிக்காராரான விளங்கும் பொன்வேல் பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத் தோட்டத்தில் அறுவடை செய்யும் வாழைகளை சுமக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

ஒருமுறை தன் அக்காவை மட்டும் வாழைத் தோட்டத்தில் விட்டு விட்டு பள்ளிக்குச் செல்கிறார். திரும்பி வந்து பார்க்கும் போது பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தனது அக்காவுக்கு என்ன நடந்தது என்பதை மிகவும் எமோஷனலாகச் சொல்வது தான் படத்தின் மீதிக் கதை.

மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கத்துரை.. வாழை படம் பார்த்து எமோஷனல் ஆன தருணம்..

வாழையை சுமக்கும் போது ஏற்படும் வலிகளும், அங்கு காட்டப்படும் அடக்கு முறைகளும் தான் படத்தின் கதையே. படிப்பில் கெட்டிக்காரானாக விளங்கும் பொன்வேல் தனது ஆசிரியரான நிகிலா விமல் மேல் பிரியம் கொள்ளும் காட்சிகள் கவிதை ரகம். பள்ளியில் நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுத்த, பிடித்தமான ஆசிரியைகளின் முகங்கள் கண்முன் வந்து செல்கிறது.

வாழை சுமக்கும் வேலைக்கு கூலி உயர்வு கேட்டு போராடும் கம்யூனிஸிட்வாதியாக கலையரசன் அவரைக் காதலிக்கும் திவ்யா துரைசாமி என இன்னொரு பக்கம் டிராக் ஓடினாலும் கிளைமேக்ஸ் காட்சியில் படம் பார்க்க வந்தவர்களை கண்ணீருடன் வீட்டுக்கு அனுப்புகிறார் மாரி செல்வராஜ். நெல்லைச் சீமையின் அழகையும், வாழ்வியலையும் அழகாக படம்பிடித்திருக்கிறார் தேனி ஈஸ்வர். தனது ஒவ்வொரு இசையிலும் காட்சிகளுடன் எமோஷனலையும் வரவழைக்கும்படி பின்னனி இசையில் கரைய விட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

மிகவும் யதார்த்தமாக முடிக்கப்பட்டிருக்கும் கிளைமேக்ஸ் காட்சி இரசிகர்கள் மனதில் இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்திச் செல்கிறது. ஒரு மகேந்திரன், ஒரு பாலா, ஒரு ராம், ஒரு பா.ரஞ்சித் என அனைவரும் கலந்து ஒரு சினிமாவை எடுத்தால் எப்படி இருக்குமோ அதை மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் மூலம் உலகத்தரமான ஓர் படைப்பினை தமிழ்சினிமாவிற்கு அளித்திருக்கிறார். வாழை – வாழையடி வாழையாய் உயரும்..

மதிப்பெண்கள் 4/5

மேலும் உங்களுக்காக...