மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கத்துரை.. வாழை படம் பார்த்து எமோஷனல் ஆன தருணம்..

Published:

பரியேறும் பெருமாள், கர்ணன், மா மன்னன் படங்களை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் வாழை. மாரி செல்வராஜின் சிறு வயது சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவரின் சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றை வைத்து வாழை படமாக கொடுத்திருக்கிறார். வாழை படத்தின் பிரிவியூ காட்சிகளைப் பார்த்த மணிரத்னம், பா.ரஞ்சித், நெல்சன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் மாரி செல்வராஜை உச்சி நுகர்ந்து பாராட்டியிருக்கின்றனர்.

இயக்குநர் பாலா படத்தைப் பார்த்து எதுவும் பேசாமல் அவரை கட்டியணைத்துக் கொண்டார். தூத்துக்குடி பகுதியில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் குடும்ப வறுமை காரணமாக வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்லும் சிறார்களின் வலியை அப்படியே பதிவு செய்து கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, சிறுவர்களாக பொன்வேல், ராகுல் ஆகியோர் மிகச்சிறந்த நடிப்பினை வழங்கியிருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பாட்டிலேயே கியூட்டாகக் கவர்ந்த சுஜிதா.. அந்தக் குழந்தை இவர்தானா?

இந்தப் படத்தினை பார்த்து ரசிகர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுதான் தியேட்டரை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் வாழை திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை வெளியே வந்து கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார் நகைச்சுவை தங்கத்துரை. ஒவ்வொருவருக்கும் ஒரு சில படங்கள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தங்கத்துரையை மிகவும் பாதித்த வாழை திரைப்படம் வெளியே வந்து மாரி செல்வராஜைப் பார்த்ததும் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியாமல் கட்டியணைத்து நெகிழ்ந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வாழை திரைப்படம் பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைப்பக்கத்தில் இன்று என் நான்காவது திரைப்படமான வாழை வெளியாகிறது. வாழையில் என் வாழ்வின் உட்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி, அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முகத்திலும், அரவணைப்பிலும் இளைப்பாறுவேன் என நம்புகிறேன்.

இவ்வாறு மாரி செல்வராஜ் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...