கே பாலச்சந்தர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நடிகர் சார்லி 800க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணசேத்திர கேரக்டர்களில் நடித்துள்ளார். இன்னும் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் தஞ்சை பல்கலைக்கழகத்தில் சினிமா சம்பந்தமான ஆய்வில் பிஎச்டி பட்டம் பெற்று உள்ளார். இந்த கட்டுரையில் நடிகர் சார்லியின் அறியப்படாத சில தகவல்களை பார்ப்போம்.
நடிகர் சார்லி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். அவர் அங்குதான் தனது கல்லூரி படிப்பை முடித்தார். சார்லிக்கு தனது கல்லூரி நாட்களில் சரித்திர கால நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்தது. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் கவர்ந்த அவர் நடிகராக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!
ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்த அவர் ஆறு வருடங்களில் ஏராளமான நாடகங்களில் பெரிய கேரக்டர் முதல் சின்ன கேரக்டர் வரை நடித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அவருக்கு பாலச்சந்தர் இயக்கிய ’பொய்க்கால் குதிரை’ என்ற காமெடி படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் சார்லின் உண்மையான பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். ஆனால் சினிமாவுக்காக அவருக்கு சார்லி என்ற பெயரை கே பாலச்சந்தர் தான் வைத்தார். ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லியை மனதில் வைத்து உனக்கு இந்த பெயரை வைத்திருக்கிறேன் என்றும் நீ அந்த சார்லி போலவே பெரிய ஆளாக வருவாய் என்றும் பாலச்சந்தர் முதல் படத்திலேயே வாழ்த்து தெரிவித்தார்.
‘பொய்க்கால் குதிரை’ நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி சார்லியின் கேரக்டருக்கும் வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து அவர் பல படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். பாலச்சந்தர் உள்பட பல இயக்குனர்களின் படங்களில் தொடர்ச்சியாக அவர் நடித்தார்.
நடிகர் சார்லிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான ’எனக்குள் ஒருவன்’ திரைப்படம். கமல்ஹாசனுக்கு நண்பராக அந்த படத்தில் அவருடன் முழுவதும் வருவார். அதேபோல் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் உள்பட சீனியர் நடிகர்களுடன் நடித்த அவர் அதன் பின்னர் அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கும் நண்பராக நடித்தார்.
குறிப்பாக ;’பூவே உனக்காக’ திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பதும் அதேபோல் ’காதலுக்கு மரியாதை’ திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருப்பதும் அவருக்கு பேரை வாங்கி கொடுத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பின் நாயகி, நாட்டிய பேரொளி பத்மினியின் அபூர்வ தகவல்கள்..
சேரன் இயக்கத்தில் முரளி மற்றும் பார்த்திபன் நடித்த ’வெற்றிக் கொடி கட்டு’ என்ற திரைப்படத்தில் அவர் பணத்தை மோசடிக்காரனிடம் கொடுத்து ஏமாந்த அப்பாவி கேரக்டரில் நடித்து இருப்பார். அந்த படத்தில் இருந்து தான் அவருக்கு குணசேத்திர நடிகர் என்ற பெயர் கிடைத்தது. அதன் பிறகு அவர் பல படங்களில் குணசேத்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சார்லி, ஆனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தும் மகன்களின் விருப்பப்படி அவர்களை நன்றாக படிக்க வைத்தார். தற்போது இருவரும் அமெரிக்காவில் நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கின்றனர்.
அவ்வப்போது அமெரிக்கா சென்று தனது மகன்களை பார்த்து வந்தாலும் அவருக்கு சென்னையில் இருப்பதில் தான் விருப்பம். மகன்கள் எவ்வளவோ கூறியும் அமெரிக்காவில் அவர் தங்க முடியாது என்று கூறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் சார்லியின் மகன் திருமணம் நடந்த போது திரை உலக பிரபலங்கள் பலர் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சார்லி ’தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற பெயரில் ஆய்வு செய்து தஞ்சை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். மிக அரிதாகவே நடிகர்கள் பிஎச்டி பட்டம் பெரும் நிலையில் அவர்களில் ஒருவராக நடிகர் சார்லி சாதனை செய்தார்.
தற்போது 63 வயதாகும் சார்லி குணச்சித்திர கேரக்டரில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க சார்லியை தான் முதலில் இயக்குனர் தேர்வு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வடிவேலுவை தேர்வு செய்தார். ஒருவேளை வடிவேலு இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருந்தால் அந்த படத்தில் சார்லி தான் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.