பாகிஸ்தானில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என அந்நாட்டின் ராணுவம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை” மற்றும் “தவறானவை” என்று இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ பதிலில், “ஜூன் 28 அன்று பாகிஸ்தானின் வஜிாிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாவை குறை கூறி பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை நாங்கள் கண்டோம். இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
“இது பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினைகளை வேறு நாட்டின் மீது திணிக்க மேற்கொள்ளப்படும் மற்றொரு முயற்சி” என்று ஒரு அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற கருத்துகள் புதிதல்ல என்றும், நம்பகத்தன்மை அற்றவை என்றும் அது குறிப்பிட்டது.
பாகிஸ்தான் தனது அண்டை நாடுகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு பதிலாக, தனது எல்லைகளுக்குள் பயங்கரவாதத்தை சமாளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 வீரர்கள் பலி
வடக்கு வஜிாிஸ்தானில் நடந்த ஒரு பயங்கரமான தற்கொலைப்படை குண்டுவெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த சம்பவத்தில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஒரு ராணுவ வாகன அணிவகுப்புக்குள் மோத செய்ததில், குறைந்தது 13 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ஹபீஸ் குல் பகதூர் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
2021ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானுடனான தனது எல்லையில் பாகிஸ்தான் கணிசமான வன்முறை அதிகரிப்பை சந்தித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிப்பதாக இஸ்லாமாபாத் காபூலை குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தலிபான்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த கருத்துப் பரிமாற்றம், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் வளர்ந்து வரும் பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து ராஜதந்திர உறவுகளை பாதிக்கின்றன. பாகிஸ்தான் தனது பிரதேசத்திற்குள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நம்பகமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இத்தகைய சம்பவங்கள் அவநம்பிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா மீது பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு சமூக வலைதள பயனர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதை இட்லி என்று சொன்னால் சட்னியே நம்பாதே என்றும் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா காரணம் என பாகிஸ்தான் சொல்வது “சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” என்றும் பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம் என்று தான் அர்த்தமாக இருக்கும் நிலையில் ’கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான்’ என்பது போல் ’தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுத்த பாகிஸ்தான் அதே தீவிரவாதத்தால் தான் அழியும்’ என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.