பெண்களுக்குத்தான் நாணம் அழகு என்பார்கள். அது கூட எல்லா இடத்திலும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு கெத்து தான் அழகு. எங்கும் எதிலும் கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கூச்சம் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம் வந்து விட்டால் அவனுக்கு வெற்றி வாய்ப்புகள் தள்ளிப்போகிறது என்று அர்த்தம். எதற்கெடுத்தாலும் பயம், கூச்சம் என வந்துவிட்டால் நமக்கு எந்த ஒரு செயலையும் திறம்படச் செய்ய முடியாது. எல்லாமே தடைக்கற்களாகத்தான் வரும். இதில் இருந்து விடுபட என்னதான் வழி? வாங்க பார்க்கலாம்.
உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும் தான் முழு காரணம். ஏனெனில், பிறக்கும் போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. கூச்சம் என்பது ஒருவகையில் தங்களின் வசதிக்காகப் பலர் அவர்களே வளர்த்துக் கொள்ளும் ஒரு குணம்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். ‘
மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது.
ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறி விடும். நீங்கள் பயந்து ஒதுங்கும் போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். சின்னத் தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடிச் செய்து விடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம்.
உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டு படி கீழே இறக்கி விட்டு விடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீதக் கூச்ச உணர்வு ஏற்படுகிறது. மூளையில் செரட்டோனின் என்ற ரசாயனம் குறையும் போது தானாகவே பயம், பதற்றம், குற்றஉணர்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறி விடும். இதைத் தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்கிறோம்.
பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறையும் ஒருவனுக்குக் கூச்ச உணர்வை ஏற்படுத்தி விடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கு எடுத்தாலும் ‘தப்பு’, ‘இது குற்றம்’ என்று அடக்கி வைக்கும் போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய் விடுகிறது.
மகனையோ, மகளையோ எந்தக் செயலையும் செய்ய விடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறை. இதனால், எந்தக் செயலையும் துணிச்சலாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய் விடும். பொருட்களைப் பேரம் பேசி வாங்க முடியாது. சாலையைக் கடக்கத் தெரியாமல் தடுமாறுவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் 18-19 வயதில் கல்லூரிக்குச் செல்லும் போது, பெற்றோர் இல்லாமல் எதையும் சந்திக்கப் பயப்படுவார்கள். ‘எதிரில் இருப்பவர் நம்மை விடச் சிறந்தவர்’ என்கிற எண்ணம் எழுந்து, தாழ்வு மனப்பான்மை வந்து விடும். தன்னம்பிக்கையே இருக்காது.யாரையும் சந்திக்க, எதிர்கொள்ளப் பயப்படுவார்கள். பெரும்பாலும் சந்திப்புகளைத் தவிர்ப்பார்கள். உங்களை நீங்களே எதிர்மறையாக முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள்.
நான் கூச்ச சுபாவம் உடையவன், எனக்குப் பயம், நான் பேச மாட்டேன், சிரிக்க மாட்டேன், எழுத மாட்டேன் என்று நீங்களே உங்களைச் சொல்லிக் கொள்வதால் அது ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன் தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்.