ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் இன்று திடீரென தாக்குதல் நடத்தியது. அப்போது, செய்தியை நேரலையில் வாசித்து கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் உயிர் பயத்தில் ஸ்டுடியோவில் இருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் இன்று சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில் அவற்றில் ஒரு தாக்குதல் ஈரான் தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது நடந்தது. கட்டிடத்தின் மீது தாக்குதல் நடந்தபோது, அப்போது செய்திகளை நேரலையில் வாசித்து கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர் கடும் அச்சமடைந்தார். உடனே அவர் செய்திகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.
மேலும் செய்தியை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த டெக்னிக்கல் நபர்களும் அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் எடுத்தனர். இது நேரலையில் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த காட்சியை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியவுடன் தொலைக்காட்சி அலுவலக கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த காட்சிகளை ஈரானிய ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஈரானின் பிரச்சார பிரிவின் மீது எங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டனர். ஈரானின் சர்வாதிகாரியை எல்லா இடங்களிலும் தோற்கடிப்போம்” என்று கூறினார்.
இதற்கு முன், இஸ்ரேல் தெஹ்ரான் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ராணுவ தளத்தையும் தாக்கியது. அப்போது, தெஹ்ரான் நகரின் பல பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தெஹ்ரான் மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டு, ராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம், “எங்கள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், நாங்கள் தெஹ்ரான் மக்களுக்கு எச்சரிக்கை வெளியிட்டோம்” என்று கூறியது.
ஈரானிய அரசு ஊடகங்கள், “இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலுக்கு” தெஹ்ரான் தயாராகி வருவதாகத் தெரிவித்தன.
இன்று அதிகாலை, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை தாக்கின. தொடர்ந்து நான்காவது நாளாக சண்டை நடப்பதால், முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.