‘குஷ்’ என்பது மேற்கு தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு அபாயகரமான போதை மருந்து. இது மனித எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது என அறிக்கைகள் கூறுகின்றன. இதை பயன்படுத்துபவர்கள் ஒரே வாரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையை எட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சார்லட் மே லீயிடம் இருந்து கைப்பற்றிய போதை பொருளின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதை மருந்தின் உற்பத்திக்காக சியரா லியோனில் கல்லறைகள் கொள்ளையடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அந்நாட்டின் ஜனாதிபதி கடந்த ஆண்டு அவசர நிலை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது.
தெற்கு லண்டனை சேர்ந்த லீ, இந்த போதை மருந்துகள் தன்னறியாமல் தன்னுடைய லக்கேஜில் மறைத்து வைக்கப்பட்டது என கூறியுள்ளார். அவரது வழக்கறிஞர் சம்பத் பெரேராவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது கொழும்புக்கு வடக்கே உள்ள ஒரு சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
லீ முன்னதாக தாய்லாந்தில் வேலை பார்த்து வந்தார். விசா காலாவதி ஆனதால் இலங்கைக்கு மூன்று மணி நேரம் பயணித்து வந்ததாக கூறப்படுகிறது. தாய்லாந்து விசா புதுப்பிக்கப்படும் வரை அவர் இலங்கையில் தங்கியிருந்தார்.
சிறையிலிருந்து லீ பேட்டி ஒன்றி கூறியதாவது: “நான் இதுவரை இந்த வகை போதை மருந்தை பார்த்ததே இல்லை. விமான நிலையத்தில் என்னை நிறுத்தியதும் அதிர்ச்சி அடைந்தேன். என் பொருட்களுடன் யாரோ இதை வைத்திருக்க வேண்டும். யார் வைத்தார்கள் என எனக்கு தெரியும்,” என்று அவர் கூறிய போதும் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
இவரது போதை மருந்து கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசின் சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.