ஒரே நபர் கொடுத்த விந்தணுவில் 10 நாடுகளில் பிறந்த 67 குழந்தைகள்.. இதில் 10 குழந்தைகளுக்கு கேன்சர்.. அதிர்ச்சி தகவல்..!

  புற்றுநோய் ஏற்பட கூடிய அளவில் மரபணு மாற்றம் கொண்ட ஆணின் விந்தணு தானத்தால் ஐரோப்பா முழுவதும் பலருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். ஆனால் இவருடைய விந்தணு மூலம் 2008 முதல் 2015 வரையிலான காலத்தில்…

sperm

 

புற்றுநோய் ஏற்பட கூடிய அளவில் மரபணு மாற்றம் கொண்ட ஆணின் விந்தணு தானத்தால் ஐரோப்பா முழுவதும் பலருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். ஆனால் இவருடைய விந்தணு மூலம் 2008 முதல் 2015 வரையிலான காலத்தில் 46 குடும்பங்களில் 67 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே விந்தணு தானம் செய்த நபரிடம் இருந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தேவையான கட்டுப்பாடுகள் இல்லாததே இதற்கான முக்கியமான காரணமாக இருக்கலாம்,” என்று மருத்துவர்கள் கூறினர்.

இந்த விந்தணு தானம் செய்தவருக்கு புற்றுநோய் இல்லை என்றாலும், TP53 எனும் மரபணுவில் அபூர்வ மாற்றம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது “Li-Fraumeni Syndrome” எனும் அரிதான நோயுடன் தொடர்புடையது. இந்த மரபணு மாற்றம் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தைக் குறிப்பிடுகிறது.

இவருடைய விந்தணு பயன்படுத்தப்பட்டதால் பிறந்த குழந்தைகள் தற்போது பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 10 குழந்தைகளுக்கு மூளை குறு, ஹோட்கின் லிம்ஃபோமா போன்ற புற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் 13 குழந்தைகளுக்கு அதே மரபணு உள்ளது, ஆனால் நோய் தோன்றவில்லை.

இந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்த மரபணு சுமார் 50% சாத்தியக்கூறுடன் பரவக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் காஸ்பர் கூறுகையில் “முழு உடல் எம்ஆர்ஐ, மூளை எம்ஆர்ஐ, வயிற்றுப் பகுதியில் அல்ட்ராசவுண்ட், கிளினிக்கல் சோதனை போன்றவை முக்கியமான பரிசோதனைகளை இந்த நபரால் பிறந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

விந்தணு தானம் கொடுத்த நபர் டென்மார்க்கில் உள்ள “European Sperm Bank” என்ற தனியார் விந்தணு வங்கியில் மட்டும் விந்தணு கொடுத்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

European Sperm Bank நிறுவனத்தின் மருத்துவ தகவல் துணைத் தலைவர் ஜூலி பவுலி புத்த்ஸ், “இந்த விவகாரம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. எங்கள் நிறுவனத்தின் மூலம் இது நடந்திருந்தாலும் எங்களால் மரபணு மாற்றங்களை முன்னே அறிய இயலாது,” என தெரிவித்தார்.

தற்போது ஒரே கொடையாளரால் எத்தனை குழந்தைகள் பிறக்கலாம் என்பதில் ஐரோப்பா முழுவதும் விதிமுறைகள் இல்லை. இனிமேல் இந்த விதி உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.