வசமாக மாட்டிக்கொண்ட டிரம்ப்.. ஹார்வர்ட் பல்கலை போட்ட வழக்கால் பரபரப்பு..!

  வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை தடை செய்த விவகாரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை விதித்தது தொடர்பாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகம்…

trump1

 

வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை தடை செய்த விவகாரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை விதித்தது தொடர்பாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இன்று டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. பாஸ்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை முதல் திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்றும், இது ஹார்வர்டு பல்கலைக்கும் அதில் பயிலும் 7,000க்கும் மேற்பட்ட விசா மாணவர்களுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரே கையெழுத்தில், ஹார்வர்டின் மாணவர் கூட்டத்தின் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு உள்ள வெளிநாட்டு மாணவர்களை அழிக்க அரசு முயன்றுள்ளது. இவர்கள் பல்கலைக்கழகத்துக்கும் அதன் இலக்குக்கும் முக்கிய பங்களிப்பு அளிக்கிறார்கள், என அந்த வழக்கில் ஹார்வர்ட் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் நிறைவேற்றுவதிலிருந்து தடுக்க, தற்காலிக தடை உத்தரவு கோரி ஹார்வர்ட் மனு தாக்கலிட திட்டமிட்டுள்ளது. அரசின் பொருந்தாத கோரிக்கைகளை ஏற்காததற்காக ஹார்வர்டு மீது நடவடிக்கை எடுப்பது அரசியல் பழிவாங்கல் எனவும் தனது மனுவில் கூறியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலையில் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் பட்டதாரி மாணவர்கள். மேலும் அவர்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருகிறார்கள்.

அத்துடன், கடந்த வியாழக்கிழமை, இந்த தடை நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க அரசு, ஹார்வர்ட் வளாகத்தில் யூத மாணவர்களை தாக்க “அமெரிக்கா விரோத, பயங்கரவாத ஆதரவாளர்கள்” அனுமதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியது.

மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஹார்வர்ட் இணைந்து செயல்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டில்கூட சீன இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவினரை கல்வி பயிற்சி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஹார்வர்ட் தலைவர் அலன் கார்பர், கடந்த ஒரு வருடத்தில் பல்கலைக்கழக ஆட்சி நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இனவெறிக்கு எதிராக விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அத்துடன், சட்டப்படி பாதுகாக்கப்பட்ட அடிப்படை கொள்கைகள் மீது பல்கலைக்கழகம் உறுதியாக நீடிக்கும் என்றும், பழிவாங்கப்படும் அச்சத்தால் பயந்துவிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தேவையில்லாமல் வசமாக மாட்டிக் கொண்டதாகவும் இந்த வழக்கின் தீர்ப்பு நிச்சயம் ட்ரம்ப் அரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.