அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் எலான் மஸ்க் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க் நடத்திய ஆன்லைன் கருத்துக்கணிப்பில், அவர் புதிய கட்சி ஆரம்பிக்கலாம் என 81% அமெரிக்கர்கள் ஆன்லைன் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அவரது தலைமையில் புதிய அரசியல் கட்சி உருவாக வேண்டும் என்று பலரும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்ற தகவல்களும் உள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதலுக்குப் பிறகு இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இது குறித்து எலான் மஸ்க் தனது பதிவில், “அமெரிக்காவில் தன் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். 80% மக்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய நேரம் இது தான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பு வைரலாக பரவியுள்ள நிலையில், 41,00,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர். அவர்களில் 81% பேர் “தாராளமாக கட்சி தொடங்கலாம்” என்றும், 19% பேர் “வேண்டாம்” என்றும் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு கட்சிகளே உள்ள நிலையில், புதிய கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைப்பது, இரு கட்சிகளின் மீதான அதிருப்தியை காட்டுகிறது என கூறப்படுகிறது.
ட்ரம்ப் கொண்டு வந்த பிரச்சனைகுரிய வரி மற்றும் செலவுத் திட்ட மசோதாக்கள் தான் அவர் மீது எலான் மாஸ்க் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட காரணம் என்றும், அதனால் அவர் அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
“அமெரிக்க அரசியலுக்கு ஒரு புதிய தலைவர் தேவை. பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த இரு கட்சி முறையை மக்கள் மறுக்கத் தொடங்கியுள்ளனர்” என்றும், இந்த கருத்துக்கணிப்பை மையமாகக் கொண்டு பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.