ஐபிஎல் வருமானத்திற்கு வரி விதித்து ஐஐடி கட்டுவோம்: பட்டதாரியின் பக்கா பிளான்.. அரசு ஆலோசிக்குமா?

  கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐக்கு வரி விதிப்பதில்லை என்றும், ஏனென்றால் அது தொண்டு அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிசிசி நடத்தும் “ஐபிஎல்லுக்கு அதிகமான வரி விதித்தால் ஒவ்வொரு ஆண்டும் 10 ஐஐடி கட்டலாம்”…

iit ipl

 

கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐக்கு வரி விதிப்பதில்லை என்றும், ஏனென்றால் அது தொண்டு அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிசிசி நடத்தும் “ஐபிஎல்லுக்கு அதிகமான வரி விதித்தால் ஒவ்வொரு ஆண்டும் 10 ஐஐடி கட்டலாம்” என்று, ஒரு ஐஐடி பட்டதாரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு இந்தியரும் இந்த ஐபிஎல் விளையாட்டில் மூழ்கினர். பிசிசிஐக்கு இதன் மூலம் அபாரமான வருமானம் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த வருமானத்தை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காக, புதிய ஐஐடிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு ஒதுக்க முடியாதா என, வீரேந்திரா என்ற ஐஐடி பட்டதாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தியாவுக்கு பணம் இல்லை என்பது பிரச்சினை அல்ல; இந்தியர்களுக்கு பணம் என்பது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் முதலீடு செய்வதில் தான் பிரச்சனை இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் மூலம் ₹11,170 கோடி வருமானம் கிடைக்கிறது. பிசிசிஐக்கு நிகர லாபம் மட்டும் ₹5000 கோடி. மூன்று ஆண்டுகளில் ₹15,000 கோடி வரை கிடைக்கிறது. இந்த தொகையில் 40% வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தால் அந்த வரித்தொகையை பயன்படுத்தி 10 புதிய ஐஐடிகள் கட்டலாம்.

வருடத்திற்கு ₹800 முதல் ₹1200 கோடி வரை வருமானம் ஈட்டும் ஐபிஎல் அணிகளிடமிருந்து வருடத்திற்கு ₹6000 கோடி வரி வசூலிக்க முடியும். இந்த தொகையை ஆராய்ச்சி நிதிக்காக பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொண்டு அமைப்பாக பதிவு செய்ததால் பிசிசிஐக்கு வருமானவரி இல்லை. ஆனால், ஆராய்ச்சி மையங்கள் வரி செலுத்துகின்றன.

மத அறக்கட்டளைகள், விளையாட்டு லீக்குகள் எல்லாம் வரியில் சலுகைகளைப் பெறுகின்றன. “பொழுதுபோக்கு எதற்காக வரி சலுகை? ஆனால், ஆராய்ச்சிக்கு எதற்காக வரி விதிக்கப்படுகிறது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

“நாம் மைக்ரோஸ்கோப்புகளுக்கு வரி விதிக்கிறோம். ஆனால், கிரிக்கெட் டிக்கெட்டுக்கு வரி விதிக்கவில்லை. இந்தியா ஒரு தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்றால், நம்முடைய பணத்தை செலவு செய்ய வேண்டிய இடம் எது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நாம் சிக்ஸருக்கு கைதட்டுகிறோம். ஆனால், விஞ்ஞானிகளுக்கு யாராவது கைதட்டுகிறோமா?”

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இரண்டும் தேவைதான். ஆனால், இதிலிருந்து கிடைக்கக்கூடிய நிதியை ஏழைகளின் அடிப்படை வருமானத்தை உயர்த்தும் நிலைகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சதவீத மக்களிடம் மட்டும் நிதி குவிந்து விட்டால், அதைக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

“விஞ்ஞானிகளை உருவாக்குவதை விட, கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது முக்கியமா?” என்ற இவருடைய கேள்வி, ஒட்டுமொத்த நாட்டையும் யோசிக்க வைக்கும் வகையில் உள்ளது.

“நல்ல விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஏன் வரவில்லை?” என்பது குறித்து பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

“பிசிசிஐயும், ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் வரிகள் விதித்து, அந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆக்கபூர்வமாக செலவழிக்கலாம். அதை விட்டுவிட்டு, ஏழை எளிய மக்களிடம் அதிக வரி வசூலிப்பது மோசமான நிர்வாகம்” என்றும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.