பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முநீர் புகைப்படத்துடன் வந்த ஒரு போஸ்டர், அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் ஒளிபரப்பாகி, அதில் ஃபிராடு, “பொய்யர்,” “தோல்வி அடைந்தவர்” என பதிவாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வீடியோ வடிவில் ஒளிபரப்பாகும். தமிழ் திரைப்படங்களின் போஸ்டர் மற்றும் டீசர்களும் அங்கு வெளியானதுண்டு.
இந்த நிலையில், டைம்ஸ் ஸ்கொயரில் நேற்று முன்தினம் திடீரென பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முநீர் புகைப்படத்துடன் கூடிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
49 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஆசிம் முநீரை “மோசடியாளர்,” “பொய்யர்,” “தோல்வியடைந்தவர்” என குறிப்பிடும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அவர் வைத்திருக்கும் பட்டங்கள் எல்லாம் போலியானவை எனவும் குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. பாகிஸ்தானிலிருந்தே சிலர் இதற்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஆதரிக்கும் வட்டாரத்தினர் நடத்திய ஆன்லைன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
மேலும், வீடியோவில் இம்ரான் கானை பாராட்டும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அவர் இரண்டு ஆண்டுகளாக சட்டத்துக்கு புறம்பாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், மிகவும் நல்ல தலைவர் என்றும், மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக வரவேண்டும் என்றும் பதிவாகியுள்ளது.
அதேபோல், தற்போதைய பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப்பை குறித்தும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் மக்களின் அதிருப்தி அரசியல் தலைவர்கள், குறிப்பாக ராணுவ தளபதி முநீர் மீது மிகவும் தீவிரமடைந்துள்ளதை காட்டும் வகையில் இந்த வீடியோ வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் ராணுவ தளபதி முநீர் மீது எந்த அளவுக்கு வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஒரு வெளிப்படை எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைகிறது எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
https://x.com/NewsArenaIndia/status/1930568558754279488