எல்லாம் அன்பு மனைவிக்காக.. 7 ஆண்டு காதல்.. தினமும் 320 கி. மீ பயணம் செய்யும் வாலிபரின் லவ்தீக பின்னணி..

Published:

காதல் என்ற உன்னதமான, அன்பான உணர்வைத் தாண்டி இந்த உலகில் பெரிய விஷயம் இருந்து விடாது என தைரியமாக சொல்லி விடலாம். அம்மா – மகன், தந்தை – மகன், கணவன் – மனைவி என எந்த உறவை எடுத்துக் கொண்டாலும் அதில் காதலும் அன்பும் நிச்சயம் அதிகமாக தான் இருக்கும்.

காலங்கள் மாறிக் கொண்டே இருக்க, காதல் என்ற பெயரில், நிறைய தவறான விஷயங்கள் அரங்கேறி அதிர்ச்சி கொடுத்தாலும் இன்னொரு பக்கம் வயதைத் தாண்டி, காலத்தை தாண்டி நிலைத்து நிற்கும் காதல் இங்கே நிறைய இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அப்படி ஒரு வார்த்தைக்கு உதாரணமாக தான் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சீன நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவிக்காக தினமும் மேற்கொண்டு வரும் நீண்ட தூர பயணம் தான் தற்போது பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, சீனாவை சேர்ந்த லின் ஷு என்ற வாலிபருக்கு தற்போது 31 வயதாகிறது.

இவர் கடந்த பல ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே, தினமும் தான் வேலைக்கு செல்வதற்காக அதுவும் தனது மனைவிக்காக 320 கி. மீ தூரத்தை சவுகரியமாக லின் ஷு பயணம் செய்து வருவது தான் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

சீனாவின் வேய்ஃபாங் என்னும் பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதையடுத்து அவரையே சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே, அதே பகுதியில் ஒரு ஃபிளாட்டையும் வாங்கியுள்ள லின் ஷு, அங்கிருந்து சுமார் 160 கி. மீ தூரத்தில் உள்ள கிங்டாவோ என்னும் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதனால், தினமும் 320 கி. மீ பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை வர, மனைவியை விட்டுவிட்டு தான் பணிபுரியும் இடத்திற்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் லின் ஷுவுக்கு மனம் வரவில்லை. இதனால், தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் லின் ஷு, 8 மணிக்குள் ரெயில், எலக்ட்ரிக் பைக் மூலம் அலுவலகம் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அலுவகத்திலேயே 9 மணிக்குள் காலை உணவு உண்ணும் லின் ஷு, தினமும் மனைவியுடன் வீட்டில் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததால் அவருக்கு அதிக வேலையை அவருடைய பாஸ் கொடுக்காமல், சரியான நேரத்திற்கு அனுப்பி விடுவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மனைவியின் அருகே இருக்க வேண்டும் என்பதற்காக வாடகை வீடையும் எடுக்காமல், ஏறக்குறைய ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் பயணம் செய்யும் லின் ஷு பகிர்ந்த வீடியோ, அவரை நினைத்து இணையவாசிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...