ஆடி பௌர்ணமியான நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று (21.07.2024) ஆடித்தபசு வருகிறது.
நிறைய கடன் சுமை இருப்பவர்களும் ஹயக்ரீவருடன் இருக்கும் மகாலெட்சுமியை இந்த ஞாயிறு அன்று வழிபாட்டால் பிரச்சனை தீரும். அன்று 2 பேருக்கு அன்னதானம் செய்யலாம். சிவபெருமானைத் தான் வழிபடுவோம் என்பவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் போகலாம். அதே நாளில் குரு பூர்ணிமாவும் வருகிறது.
யாரை நாம் குருவாகப் பெற்று இருக்கிறோமோ அவர்களிடம் ஆசி வாங்கி அவர்களது முழு கருணையும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று அவரை வணங்கக்கூடிய அற்புதமான நாள். நமக்கு குரு என்று யாரும் இல்லை என்றால் இறைவனையே குருவாகக் கொள்ளலாம்.
குரு அருகில் இல்லை என்றால் இருந்த இடத்தில் இருந்தே பிரார்த்தனை பண்ணலாம். குருநாதரும் நல்ல சவுகரியமா இருந்து நிறைய மாணவர்களை உருவாக்க வேண்டும் என கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்யலாம்.
சத்ய நாராயணர் பூஜையும் இந்த நாளில் இருந்தே செய்ய ஆரம்பிக்கலாம். நாளை தான் அம்பாள் சங்கர நாராயணர் தரிசனம் பெற தவம் இருந்த நாளான ஆடித்தபசும் வருகிறது.
இந்த நன்னாளில் யார் யாருக்கு என்னென்ன வழிபாடுகள் தேவையோ அவர்கள் எளிமையாகச் செய்து அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறலாம்.
நாளை சங்கரன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடக்கும். ‘அரியும், சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு’ என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் சைவ, வைணவர்களிடையே அடிக்கடி கருத்து மோதல்கள் நடப்பதுண்டு. அந்தக் குறையைப் போக்கும் வகையில், அவர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும் விதமாகவும் இந்தத் திருவிழா நடக்கிறது.
இறைவனே நான் ஒருவன் தான் என பாதி உடலில் சிவனாகவும், பாதி உடலில் ஹரியாகவும் இருந்து அருட்காட்சி தருகிறார். அந்த அற்புதமான தரிசனம் வருடத்தில் இந்த ஆடித்தபசு நாளில் மட்டும் தான் நடக்கிறது.
அதனால் அன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று இந்தத் திருக்காட்சியைக் காண்பார்கள். ஆடித்தபசு நாளான அன்று நாமும் கோமதி அம்பாளையும், சங்கர நாராயணரையும் வழிபட்டு அவர்களது அருளையும் பெறுவோம்.