அமெரிக்க விமானப்படையின் வலிமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் B-2 பாம்பர் விமானங்கள், ஈரானின் அணுசக்தி மையங்களை அழிக்கும் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கின என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்காவின் மிஸ்ஸூரி மாகாணத்தில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், வானிலேயே பலமுறை எரிபொருள் நிரப்பப்பட்டு, தொடர்ந்து பறந்து, யாருக்கும் தெரியாமல் இலக்குகளை துல்லியமாக தாக்கின.
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் நடந்த இந்தத் தாக்குதல், B-2 ஸ்பிரிட் விமானம் மேற்கொண்ட மிகப்பெரிய மற்றும் 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த இரண்டாவது நீண்டகால நடவடிக்கை ஆகும். மொத்தம் 37 மணிநேரம் வானில் பறந்த இந்த விமானங்கள், இடைவிடாத நீண்ட பயணத்தை மேற்கொண்டன. ஆனால், இந்த ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம், வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு பறக்கும் ஒரு ‘பறக்கும் ஹோட்டல்’ போன்றது என்பதால், இவ்வளவு நீண்ட பயணம் ஒரு சவாலாக இருக்கவில்லை.
B-2 பாம்பர் விமானம், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் ஆகும். இது முதன்முதலில் 1989 இல் பறக்கவிடப்பட்டு, 1999 இல் கொசோவோ போரின் போது முதன்முறையாக போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. நீண்ட தூர உளவு மற்றும் குண்டுவீச்சு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட விமானங்களின் வரிசையில் இது வருகிறது. B-1 லான்சர், B-52 ஸ்ட்ராடோபோர்ட்ரஸ், F-117 நைட்ஹாக்ஸ் போன்ற தனது முந்தைய தலைமுறை விமானங்களிலிருந்து B-2 பல வகைகளில் மேம்பட்டது.
B-2 பாம்பர் விமானத்திற்குள், விமானிகள் ஓய்வெடுக்க படுக்கைகள், மைக்ரோவேவ் அடுப்புகள், மற்றும் தின்பண்டங்கள் நிறைந்த சேமிப்பு அறைகள் உள்ளன. பயணத்தின்போது மிட்டாய் பார்கள், தானியங்கள், சாண்ட்விச்கள், பால், குளிர்பானங்கள் போன்ற உணவுகளும், கழிப்பறைகளும் விமானிகளுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, B-2 விமானத்தை இரண்டு விமானிகள் இயக்குவார்கள். ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ நடவடிக்கையின்போது, 37 மணிநேரம் நீடித்த இந்த பணியை மேற்கொள்ள, இரண்டு விமானிகளுக்கும் உணவு மற்றும் அனைத்து வசதிகளும் கிடைத்தன. சில சமயங்களில், மூன்றாவது விமானி ஒருவர் காத்திருப்பில் இருப்பார், அவர் மற்ற விமானிகளுடன் சுழற்சி முறையில் பணியில் இணைவார்.
இலக்கு பகுதிக்கு 18 மணிநேர விமான பயணம் என்பதால், விமானங்கள் KC-135 அல்லது KC-46 எரிபொருள் டேங்கர்கள் மூலம் பலமுறை வானில் எரிபொருள் நிரப்பிக்கொண்டன. இந்த டேங்கர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட சோதனை சாவடிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த பாம்பர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைவதற்கு சற்று முன்பு, ஒரு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், ஈரானின் முக்கிய தரை படுகுழி இலக்குகளுக்கு எதிராக இருபதுக்கும் மேற்பட்ட டோமஹாக் தரை தாக்குதல் குரூஸ் ஏவுகணைகளை ஏவியது.
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ தாக்குதல் தொகுப்பு ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்தபோது, அமெரிக்கா பல ஏமாற்று தந்திரங்களை பயன்படுத்தியது. இதில் சில போலியான ஏமாற்று விமானங்களும் அடங்கும்.
ஈரான் நேரம் அதிகாலை 2:10 முதல் B-2 விமானம் இலக்கை நோக்கி ஆயுதங்களை வீசியது. அதை தொடர்ந்து மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்களும் தங்கள் இலக்குகளை தாக்கின. மொத்தம் 14 MOPகள் இரண்டு அணுசக்தி இலக்கு பகுதிகளில் வீசப்பட்டன. மூன்று ஈரானிய அணுசக்தி உள்கட்டமைப்பு இலக்குகளும் இரவு 7:05 மணி வரை துல்லியமாக தாக்கப்பட்டன.