புனே நகரில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு தம்பதியினர் திடீரென விபத்தில் சிக்க, அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ரூ.75,000 மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் 32 வயதான சச்சின் சஞ்சய் மஹஜன் தனது மனைவியுடன் தங்கள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, அவர்களது மோட்டார் சைக்கிள் ஒரு பெரிய பள்ளத்தில் சிக்கி சறுக்கியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். விபத்து காரணமாக சஞ்சய் மஹஜன் சிறிது நேரம் மயக்கமடைந்ததாகவும், அவரது மனைவிக்கு கைகளில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நேரத்தில், ‘நல்லவர்கள்’ போல் பாசாங்கு செய்த இரண்டு நபர்கள், உடனடியாக உதவி செய்ய முன்வந்துள்ளனர். விழுந்த மோட்டார் சைக்கிளை தூக்கி ஒழுங்காக நிறுத்தி, தம்பதியினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களது இந்த ‘உதவிக்கு’ மனதார நன்றி சொல்லிவிட்டு, தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
ஆனால், விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, மஹஜன் தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தான் அணிந்திருந்த ரூ.75,000 மதிப்பிலான தங்கச்சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தம்பதியினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தேடியும், சங்கிலி கிடைக்கவில்லை. அப்போதுதான், அவர்களுக்கு உதவி செய்த அந்த இருவர் மீதும் சந்தேகம் வலுத்துள்ளது.
அந்த இருவரை தேடிச் செல்லலாம் என்று முடிவெடுத்தபோது, தங்களது மோட்டார் சைக்கிளின் சாவியையும் அவர்கள் திருடியிருக்கலாம் என்பதை அறிந்து தம்பதியினர் மேலும் அதிர்ச்சியடைந்தனர். கால தாமதிக்காமல், இருவரும் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து அந்த இரண்டு மர்ம நபர்கள் மீதும் புகார் பதிவு செய்தனர்.
காவல் நிலைய அதிகாரி உடனடியாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை தரலாமா?’ என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்றும், மனித நேயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.