இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் மரம் விழுந்து 7 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனின் டேகன்ஹாம் பகுதியை சேர்ந்த சிறுமி லியோனா, ஒரு பூங்காவிற்கு சென்றிருந்தபோது, இவரும் மேலும் சில குழந்தைகளும், உலோகக் கம்புகள் கொண்டு தாங்கி நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் ஒரு மரம் சரிந்து விழுந்ததில் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர்.
கண்ணெதிரே நடந்த இந்த பயங்கர நிகழ்வை கண்டு பூங்காவில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனே ஓடிவந்து மரத்தை அகற்ற முயற்சி செய்தனர்.
படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லியோனா, பின்னர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதே விபத்தில் சிக்கிய ஆறு வயது சிறுமி ஒருவர் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மூன்று குழந்தைகளுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
சிரித்த முகத்துடன், இருபக்கமும் பிங்க் ரிப்பன்களுடன் குதிரைவால் பின்னலுடன் காட்சியளிக்கும் அந்த சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சிறுமியின் குடும்பத்தினர் இந்த விபத்து குறித்து கூறியபோது, ‘உடைந்த இதயத்துடனும், கற்பனை செய்ய முடியாத வலியுடனும் எங்கள் அன்பான மகள் லியோனாவின் இழப்பை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் அழகான, அன்பான மகள், எங்களிடமிருந்து மிக விரைவாக பறிக்கப்பட்டுவிட்டாள்,” என்று கூறியுள்ளனர். மேலும் லியோனா ஒரு குழந்தை மட்டுமல்லம் அவள் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தவள் என்றும் கூறினர்.
லியோனாவுக்கு நிறைய கனவுகள் இருந்தன, அந்த கனவுகள் இப்போது நிறைவேறாமல் போய்விட்டன. அவள் எப்படிப்பட்டவளாக வளர்ந்திருப்பாள் என்று நாங்கள் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்போம், ஆனால் அவள் எப்படிப்பட்டவளாக இருந்தாள் என்பதை நாங்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.”
எங்களுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. எங்கள் மகள் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. லியோனா எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வாள். ஒவ்வொரு சிரிப்பிலும், ஒவ்வொரு சூரிய கதிரிலும், உலகில் நாம் காணும் ஒவ்வொரு கருணை செயலிலும் நாங்கள் அவளை காண்போம் என பெற்றோர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்தது.