யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலை தேர்வைக் கூட தாண்ட முடியாமல் போன நேஹா பியாட்வால் மூன்றாவது முயற்சியில் முதன்மை தேர்வு எழுதியும், வெற்றி கிடைக்காத நிலையில் தனது நான்காவது முயற்சியில், அகில இந்திய அளவில் 569வது இடத்தை பிடித்து, யு.பி.எஸ்.சி. தேர்வில் அபார வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு முக்கிய காரண மூன்று ஆண்டுகள் செல்போனை அவர் தூக்கி எறிந்தது தான்.
நேஹா பியாட்வால் ராஜஸ்தானில் பிறந்திருந்தாலும், சத்தீஸ்கரில் உள்ள ராய்பூரில் வளர்ந்தார். அவரது வாழ்க்கையின் முதல் தோல்வி, அவர் 5-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தபோது ஏற்பட்டது. ஆனால், இந்த முடிவு அவரை சோர்வடைய செய்யவில்லை. மாறாக, சவால்களை கற்றுக்கொண்டு, அவற்றை கடந்து வெல்வதற்கு அதுவே அவரைத் தூண்டியது.
ஒரு நேர்காணலில், நேஹா தனது தந்தையுடன் போபாலுக்கு சென்றபோது, அவர் சேர்ந்த பள்ளி ஒரு ஆங்கிலம் பேசும் பள்ளி என்றும், “ஹிந்தியில் பேசினால் அபராதம் விதிப்பார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவர் அந்த மொழியை கற்றுக்கொண்டு சவாலை எதிர்கொண்டார்.
வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்த தனது தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி, நேஹா யு.பி.எஸ்.சி. தேர்வை எழுத முடிவு செய்தார். ஆனால், இங்கேயும் அவருக்கு தொடர்ச்சியான தோல்விகள் காத்திருந்தன. மூன்று தோல்விகளுக்கு பிறகு, அவர் தனது செல்போனை தூக்கி எறிந்துவிட்டு படிப்பில் முழுமையாக மூழ்கினார். தினமும் 17-18 மணிநேரம் படித்தார், மேலும் மூன்று ஆண்டுகள் செல்போனை அவர் தொடக்கூட இல்லை.
செல்போனை 3 ஆண்டுகள் மறந்ததால் அவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் 960 மதிப்பெண்கள் பெற்று, தனது கனவை அடைந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
தேர்வு எழுதுபவர்கள் தியாகம் செய்வதாக கூறப்படுவதை நேஹா நம்பவில்லை. பெற்றோர்கள்தான் உண்மையான தியாகத்தை செய்கிறார்கள் என்று அவர் ஆணித்தரமாகக்கூறுகிறார். ஆன்லைனில் பகிரப்பட்ட ஒரு நேர்காணலில் நேஹா நெகிழ்ச்சியுடன் பேசுகையில், “சுற்றுலா பயணத்திற்கு செல்லாமல் இருப்பதோ அல்லது எதையாவது வாங்காமல் இருப்பதோ தியாகம் அல்ல. நீண்ட நாள் வேலைக்கு பிறகு வீட்டிற்கு வந்து, உங்கள் குழந்தைகளுக்காக முயற்சி எடுப்பதுதான் உண்மையான தியாகம். என் அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்த 30 நிமிடங்களுக்குள், எனக்கு கணிதம் முதல் வரலாறு வரை வகுப்புகள் எடுப்பார்,” என்று குறிப்பிட்டார்.
நேஹா தனது கனவை அடைய அவரது குடும்பத்தினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அவரது அண்ணன் முதல் அத்தை வரை, இறுதி நேர்காணலுக்கு தயாராவதற்கு உதவும் வகையில் அனைவரும் அவரை பயிற்சி நேர்காணல் எடுத்து அவருக்கு தன்னபிக்கையை அளித்தனர்.