தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் அரசியல் களத்தில் முழு வீச்சில் இறங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, டெல்டா மாவட்டத்தில் ஒரு ரோடு ஷோ நடத்தத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஒரு மெகா பாதயாத்திரையை மேற்கொள்ளவிருப்பதாகவும், இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தப் பயணம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் களத்திற்கு முன் டெல்லி பயணம்?
இந்த பரபரப்பான சூழலில், தேர்தல் களத்தில் இறங்குவதற்கு முன்பே விஜய் டெல்லி செல்லவிருப்பதாகவும், அங்கு ராகுல் காந்தியிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டிருப்பதாகவும் வெளியாகி இருக்கும் ஒரு தகவல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணிக்கு நெருக்கடியா?
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய் கட்சியுடன் கூட்டணியில் இணைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், விஜய் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணி உறுதி செய்யப்பட்டால், திமுக கூட்டணி கணிசமாக பலவீனமடையும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. திமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் வெளியேறினால், திமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்!
விஜய் டெல்லி செல்வது மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பது குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சிலர் கூறி வருகின்றனர். அதேநேரம், அப்படி ஒரு சந்திப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், காங்கிரஸ் கட்சியை விஜய் கூட்டணிக்குள் கொண்டு வர ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சில தொண்டர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசியலின் புதிய திருப்பம்: கூட்டணி ஆட்சி அவசியமாகிறதா?
மொத்தத்தில், இனிவரும் காலங்களில் அதிமுகவோ அல்லது திமுகவோ தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்காமல் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது கடினம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று வெற்றி பெறும் திராவிடக் கட்சிகள், அதிகார பங்கீட்டில் தயக்கம் காட்டுவது மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனிமேல் கூட்டணி ஆட்சி என்ற அறிவிப்பை வெளியிடும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்க முடியும் என்று பல கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றன. இது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கலாம்.