விஜய் அமைக்கும் புதிய அரசியல் கூட்டணியில் திருமாவளவன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய் கூட்டணியில் இணைந்தால், திருமாவளவனுக்கு செக் வைக்கும் வகையில், திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு வர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது ஆசியுடன் தான் செல்வப்பெருந்தகை, டாக்டர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இருந்த கூட்டணி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இருக்காது என்றும், கூட்டணியிலிருந்து வெளியேற்றங்கள் மற்றும் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி: தனிமைப்படுத்தப்படும் நிலை?
அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தவுடன், அந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றுவரை எந்த கட்சியும் இந்த கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. தமிழக மக்கள் மத்தியில் பாஜக எதிர்ப்பு உணர்வு இன்னும் இருப்பதால், பாஜக இருக்கும் கூட்டணியில் சேர்ந்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றுதான் பெரும்பாலான கட்சிகளின் மனநிலையாக உள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவேதான், அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் சேர தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய் கூட்டணிக்கு குவியும் ஆதரவு
ஆனால், அதே நேரத்தில் புதிய கூட்டணியை உருவாக்கி வரும் விஜய்க்கு ஆதரவு குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திருமாவளவன் விஜய்யுடன் பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும், 40 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், ஒரு சில அமைச்சர் பதவிகள் தந்தால் தானும் விஜய் கூட்டணியில் சேர தயார் என தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மதிமுகவும் விஜய் கூட்டணியில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியே போனால், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய் கூட்டணியில் வர வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆக மொத்தம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை – ராமதாஸ் சந்திப்பு: பின்னணி என்ன?
இந்த நிலையில் தான், செல்வப்பெருந்தகை திடீரென டாக்டர் ராமதாஸை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமாவளவன் வெளியேறினால், திமுக கூட்டணியில் பாமக உறுதி செய்யப்படும். ஆனால், அதே நேரத்தில் அதிமுக கூட்டணி மற்ற அரசியல் கட்சிகளால் கைவிடப்படுவதாகவே தெரிகிறது. பாஜக இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம் என்று கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளுமே கூறும் நிலையில், பாஜகவால் அதிமுக தனித்துவிடப்படுவதாகவும், இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இருந்தால் இந்த கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் மாற்றங்கள்: பொறுத்திருந்து பார்ப்போம்
ஆனால், அரசியல் என்பது நொடிக்கு நொடி நிகழும் அதிரடி மாற்றங்கள் நிறைந்த களம் என்பதால், அடுத்து வரும் 10 மாதங்களில் இன்னும் எத்தனை மாற்றங்கள் வரும், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.