போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே.. போலி மேட்ரிமோனியல் அக்கவுண்ட்.. 3,194 பெண்களுக்கு விரித்த வலை.. ரூ.3 கோடி இழந்த புனே பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

  புனேவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமண வலைத்தளம் மூலம் ஏமாற்றி, ரூ. 3.6 கோடி மோசடி செய்த ஆஸ்திரேலிய வாழ் இந்திய வம்சாவளி நபர் ஒருவரை புனே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

fraud

 

புனேவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமண வலைத்தளம் மூலம் ஏமாற்றி, ரூ. 3.6 கோடி மோசடி செய்த ஆஸ்திரேலிய வாழ் இந்திய வம்சாவளி நபர் ஒருவரை புனே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ‘டாக்டர் ரோஹித் ஓபராய்’ என்ற போலியான அடையாளத்தில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நபரால் இதேபோன்ற மோசடிகளுக்கு ஆளான வேறு பெண்களும் இருந்தால், முன்வந்து புகார் அளிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது புனேவில் வசித்து வருகிறார். அவர் ஒரு திருமண இணையதளத்தில் தனக்கான வாழ்க்கை துணையை தேடி சுயவிவரம் ஒன்றை உருவாக்கியிருந்தார். 2023ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்ட அபிஷேக் சுக்லா அப்பெண்ணை தொடர்பு கொண்டு, அவருடன் நட்பு பாராட்டினார். பின்னர், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, அவரது முழு நம்பிக்கையையும் பெற்றார். பின்னர் அபிஷேக் சுக்லாவும், அப்பெண்ணும் புனே மற்றும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஒன்றாக சென்று ஒன்றாகத் தங்கியுள்ளனர்.

“அப்பெண் தனது முந்தைய திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்று ஜீவனாம்சமாக ரூ. 5 கோடி பெற்றிருந்தார். குழந்தைகள் நலனுக்கான மனநல மற்றும் ஆன்மீக திட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிதி நிலைமை பற்றி தெரிந்துகொண்ட அபிஷேக் சுக்லா, அப்பெண்ணின் திட்டத்தை சர்வதேச அளவில் எடுத்து செல்லவும், அதற்கான நிதி ஏற்பாடுகளுக்கு உதவுவதாகவும் கூறி, ஒரு போலி வணிக முன்மொழிவில் அவரை சிக்க வைத்தார்.

அபிஷேக் சுக்லா, அப்பெண்ணை தனது வாழ்க்கை பார்ட்னர் மட்டுமின்றி, தொழில் பார்ட்னர் என்று கூறி ‘இவோன் ஹண்டயானி’ மற்றும் ‘வின்சென் குவான்’ ஆகிய இருவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் சிங்கப்பூரில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களை நம்பவைத்து, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு அப்பெண்ணை சுக்லா சம்மதிக்க வைத்துள்ளார். காலப்போக்கில், அப்பெண் மூன்று கோடி ரூபாய்க்கும் அபிஷேக் சுக்லா குறிப்பிட்ட கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அதன்பிறகு அபிஷேக் சுக்லா தனக்கு வாய் புற்றுநோய் வந்ததாக கூறி, படிப்படியாக அப்பெண்ணுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

“செப்டம்பர் 2024ஆம் ஆண்டு, ‘வின்சென் குவான்’ என்ற நபரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அபிஷேக் சுக்லா இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஒரு மோசடி செயல் என்று சந்தேகித்த அப்பெண், ஒரு நண்பரிடம் இதை தெரிவித்தார். அந்த நண்பர் இது ஒரு மோசடியாக இருக்கலாம் என்று எச்சரித்தார். அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், நவம்பர் 2024ஆம் ஆண்டு புனே சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், அபிஷேக் சுக்லா ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்தவர் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது. உடனடியாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு எதிராக ‘லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் அக்டந்த புதன்கிழமை அன்று, அபிஷேக் சுக்லா சிங்கப்பூரிலிருந்து மும்பை வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் சுஷில் தம்ரே தலைமையிலான குழு, சுக்லாவை மும்பை விமான நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் டிஜிட்டல் செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக பகுப்பாய்வு செய்ததில், அவர் திருமணத் தளம் வழியாக ‘டாக்டர் ரோஹித் ஓபராய்’ என்ற போலி அடையாளத்தை பயன்படுத்தி குறைந்தது 3,194 பெண்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடியின் அளவு மிக அதிகமாக இருக்கலாம், மேலும் விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன,” என்று தேஷ்முக் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் புனே சைபர் காவல்துறைஅபிஷேக் சுக்லாவால் எந்த பெண்ணாவது ஏமாற்றப்பட்டு இருந்தால் crimecyber.pune@nic என்ற மின்னஞ்சல் ஐடி அல்லது 7058719371/75 என்ற தொலைபேசி எண் மூலம் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திக்கு சமூக வலைத்தள பயனர்கள், ‘மனிதர்கள் உழைத்து வாழ வேண்டும் என்பதை மறந்துவிட்டு எப்படி மோசடி செய்து பிழைக்கலாம் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் ’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே’ போன்ற பாடல் வரிகளையும் கமெண்ட்ஸ் ஆக பதிவு செய்து வருகின்றனர்.