அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பிறகு, தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது என்பதும், குறிப்பாக பாஜக-அதிமுக கூட்டணியில் சேர போகும் கட்சிகள் குறித்த பட்டியல்கள் நீண்டு கொண்டே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
எந்த காரணத்தை முன்னிட்டு, அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகிய மூவரையும் சேர்க்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கறாராக சொல்லிவிட்டார்.
ஆனால் அதே நேரத்தில், பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் சிலவற்றை மேற்கண்ட மூவருக்கும் கொடுப்பதில் அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும், அவர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட போட்டியிட்டுக் கொள்ளலாம் என்றும், இரட்டை இலை சின்னத்தில் அவர்கள் போட்டியிட அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டதாக தெரிகிறது.
பாஜக எடுத்த ஒரு கருத்துக்கணிப்பில், தென் மாவட்டங்களில் 25 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகிய மூவரும் இருக்கிறார்கள் என்றும், அதனால் மூவரையுமே கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைப் போல், டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஜான் பாண்டியன் கட்சிகள் உள்ளிட்ட சிறு கட்சிகளையும் பாஜக கூட்டணியில் இணைக்கப்படும் என்றும், ஏற்கனவே தேமுதிக மற்றும் பாமகவிடம் பாஜகம் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கடைசி கட்டத்தில் விஜய்யை அதிமுக-பாஜக கூட்டணிக்கு இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஏற்கனவே உள்ள திமுக கூட்டணி, திமுக கூட்டணிகளில் இல்லாத கட்சிகள் அனைத்தும் இணைந்த அதிமுக கூட்டணி மற்றும் தனித்துப் போட்டியிடும் சீமான் என மும்முனை போட்டி தான் வரும் தேர்தலில் இருக்கும் என்றும், அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சின்ன சின்ன கட்சிகள் என புறந்தள்ளி விடாமல், திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் இணைக்கும் பாஜகவின் சின்ன சின்ன ஆசை எந்த அளவுக்கு வெற்றி பெறும் என பொறுத்திருந்து பார்ப்போம்.