கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் செய்த போது, அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தற்போது மேற்கு வங்கத்தில் வாக்காளராக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், அந்த அரசை கவிழ்க்கும் அளவுக்கு இருந்தது என்பதும், வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில், அந்த போராட்டத்தில் நியூட்டன் தாஸ் என்பவர் கலந்து கொண்டதாகவும், அவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளராக இருக்கிறார் என்ற தகவல் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நியூட்டன் விளக்கம் அளித்த போது, “நான் இந்திய குடிமகன் தான். என்னிடம் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. வங்கதேசத்தில் எங்களுடைய பூர்வீக சொத்துக்களை விற்பதற்காக சென்றேன். அப்போது எதிர்பாராத விதமாக அந்த போராட்டத்தில் சிக்கிக் கொண்டேன். 2014 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். 2017 ஆம் ஆண்டு, நான் வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டபோது, உள்ளூர் எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியால் மீண்டும் புதிய வாக்காளர் அட்டை பெற்றேன். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கூட வாக்களித்துள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், நியூட்டனின் உறவினர் ஒருவர் கூறியபோது, “நியூட்டன் உண்மையில் வங்கதேசத்தில் பிறந்தவர் தான். அவர் வங்கதேசத்திலும் பல தேர்தல்களில் வாக்களித்துள்ளார். கொரோனா காலத்தில், அவர் இந்தியாவில் உள்ள பூர்வீக நிலத்தை விற்பதற்காக வந்தவர் இங்கேயே தங்கி, தற்போது இந்திய குடிமகன் போல் ஆவணங்களையும் பெற்று விட்டார்,” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. “மேற்குவங்க வாக்காளர்கள் அவருக்கு வாக்கு போட மாட்டார்கள் என்பதால், வங்கதேசத்திலிருந்து வாக்காளர்களை அழைத்து வந்து வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர்,” என்று விமர்சனம் செய்துள்ளது.
இதே போல் ஆயிரக்கணக்கான நியூட்டன் தாஸ்-கள் மேற்குவங்கத்தில் இருக்கிறார்கள் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.