விஜய் முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில் திமுகவின் வெற்றியை சிதைக்க முடியும் என பத்திரிகையாளர் மணி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் திமுகவின் தொடர் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டதாக இருந்தது. அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் பிரிந்து பலவீனமாக இருந்தது திமுகவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. மேலும், பாஜக தனி கூட்டணியாகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், பலவீனமான அதிமுக மற்றும் பாஜகவை எதிர்த்து திமுக 40 தொகுதிகளையும் மொத்தமாக அள்ளியது. இதே நிலைமை 2026 சட்டமன்ற தேர்தலில் நீடித்தால், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் நிலைமை தலைகீழானது. அதிமுக – பாஜக கூட்டணி உருவானதும் இன்னும் நிலைமை மோசமானது. இப்போது திமுகவிற்கு இருக்கும் ஒரே அச்சம் விஜய் மட்டுமே. அதுமட்டுமின்றி, ஸ்டாலின் இருக்கும் வரை விஜய்யால் திமுகவை பெரிய அளவில் பலவீனப்படுத்த முடியாது, ஆனால் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி திமுக தலைமையாக பொறுப்பேற்றால், விஜய் அவரை மிக எளிதில் வீழ்த்தி விடுவார் என்றும், திமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்து விடுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பத்திரிகையாளர் மணி இது குறித்து பேசியபோது, “ஸ்டாலினை விஜய் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது, ஆனால் ஸ்டாலினுடைய ஒரே பயம், உதயநிதிக்கு பெரிய அச்சுறுத்தலாக விஜய் இருப்பார் என்பதுதான். 2026 தேர்தலிலே விஜய் ஜெயித்து ஆட்சி அமைப்பார் என்பதை நான் சொல்ல மாட்டேன், ஆனால் அதே நேரத்தில் திமுகவின் வெற்றியை அவர் சிதைத்து விடுவார் என்பது மட்டும் உறுதி” என்று கூறியுள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுகிறது என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் வைத்துக்கொண்டு பாமகவுடன் செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சியை கோபப்படுத்தியதற்கு சமம் என்றும் தெரிவித்தார். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகளின் வன்னியரசு, “காங்கிரசை விட நாங்கள் பலமாக இருக்கிறோம், எங்களுக்கு காங்கிரசை விட அதிக தொகுதிகள் வேண்டும்” என்று பதிலடி கொடுத்ததும் கூட்டணி கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் வெளியிட்ட கருத்தில், “விஜய்யின் பலத்தை பொறுத்துதான் திமுக ஆட்சி அமைக்க முடியும்” என்று கூறியதும் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி. தராததால் கோபத்தில் இருக்கும் மதிமுக, வரும் தேர்தலில் குறைந்தது 12 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டு வருகிறது. எனவே, திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுமே பிரச்சனையை உண்டு பண்ணும் என்பதால், திமுக அதை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. அப்படி சமாளித்து கூட்டணியை தக்க வைத்துக் கொண்டாலும், விஜய்யை சமாளிப்பது என்பது ஒரு பெரிய வேலையாக உள்ளது.
ஏனெனில், இளைய தலைமுறை வாக்குகள், முதல் தலைமுறை வாக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 90% விஜய்க்கு போய்விடும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. எனவே, அதிமுக – பாஜக கூட்டணியை விட விஜய் தான் திமுகவுக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யை பொறுத்தவரை, திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கித் தீர வேண்டும் என்று குறி வைத்துவிட்டார். “குறி வச்சா இரை விழணும்” என்ற ரஜினி வசனம் போல், அவர் நிச்சயம் திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கிவிடுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.