பழைய எடப்பாடி பழனிசாமி தற்போது இல்லை,” “விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தில் வரும் பழைய பன்னீர்செல்வம் வரணும்” என்ற வசனம் போல் தொண்டர்களின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் தற்போது எடப்பாடி பழனிசாமி வீரியமாக மாறிவிட்டார். அவர் அமைதியாக இருந்து சரியான நேரத்தில் பாஜகவுக்கும் “தண்ணீர் காட்டுவார்” என்று அதிமுக வட்டாரங்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் ஒரே பலம் இரட்டை இலை சின்னம் மற்றும் அந்த கட்சிக்கான குறிப்பிட்ட அளவிலான வாக்கு சதவீதம். இப்போது கூட அதிமுகவுக்கு 20% வாக்கு சதவீதம் இருக்கிறது என்பதை திமுகவே ஏற்றுக்கொள்கிறது. எனவே, அதிமுக இன்னும் கொஞ்சம் கவனமாக தேர்தல் பிரச்சாரம் செய்தால், சரியான கூட்டணியை அமைத்தால் நிச்சயம் 25 முதல் 30 சதவீதம் வரை வாக்கு சதவீதம் பெற வாய்ப்புள்ளது.
அதிமுகவுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம் திமுக ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்திதான். டாஸ்மாக் ஊழல் உட்பட பல ஊழல்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 1000 ரூபாய் திட்டம் என்பது ஒரு பாசிட்டிவ் ஆக இருந்தாலும், 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பதும், ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் 1000 ரூபாய் என்ற நிலையில், பல குடும்பத்தில் மாமியாருக்கு அந்த பணம் சென்றுவிடுகிறது என்பதால் மருமகள் கோபமாக இருப்பதாகவும், எனவே மருமகள் அதிமுகவுக்குத்தான் ஓட்டு போடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த 1000 ரூபாய் விவகாரம் எந்த அளவுக்கு பாசிட்டிவ்வாக இருக்கின்றதோ, அதே அளவுக்கு நெகட்டிவ் ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில், 1000 ரூபாய் கொடுத்துவிட்டு 2000 ரூபாய்க்கு தேவையான விலைவாசி ஏறிவிட்டது என்றும், சொத்து வரி, தண்ணீர் வரி உட்பட பல வரிகள் ஏறிவிட்டது என்பதும் மக்கள் மத்தியில் அதிருப்தியாக உள்ளது. எனவே, திமுக ஆட்சி மேல் உள்ள அதிருப்தி காரணமாக அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி தற்போது ஒரு சக்தி வாய்ந்த தலைவர் ஆகிவிட்டார். கூட்டணி ஆட்சி என்று பாஜக சொல்வதை அவர் மறுக்கவில்லை என்றாலும், சரியான நேரத்தில் அவர் பதிலடி கொடுப்பார். அவர் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேர்தல் ரிசல்ட் வரட்டும் என்பதுதான். தேர்தல் முடிவுகளில் தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் அளவுக்கோ அல்லது பாஜக இல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வந்துவிட்டால், நிச்சயம் அவர் ஆட்சியில் பங்கு என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார். இப்போது தேவையில்லாமல் அந்த பிரச்சனையை கிளற வேண்டாம் என்றுதான் அமைதியாக இருக்கிறார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.
மொத்தத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அளவுக்கு ஆளுமையான தலைவராக இல்லாவிட்டாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு ஒரு சரியான தலைவர் தான் என்று அவரது கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றனர். திமுக கூட்டணி மற்றும் புதிய வரவான விஜய் கூட்டணியை சமாளித்து எடப்பாடி பழனிசாமி வெற்றியை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.