காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை.. திமுக எதிர்க்கட்சியாக இருக்கவே லாயக்கு: பத்திரிகையாளர் மணி..!

சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொடூரம் என பத்திரிகையாளர் மணி விமர்சித்துள்ளார். அந்த நகையை உண்மையாகவே அந்த இளைஞர் திருடி இருந்தாலும், “அடித்துக் கொல்வதற்கு யார்…

mani stalin

சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொடூரம் என பத்திரிகையாளர் மணி விமர்சித்துள்ளார். அந்த நகையை உண்மையாகவே அந்த இளைஞர் திருடி இருந்தாலும், “அடித்துக் கொல்வதற்கு யார் காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பதுதான் வேடிக்கை,” என்று மணி தெரிவித்தார். குறிப்பாக, வி.சி.க. தலைவர் திருமாவளவனின் மௌனம் ஏமாற்றமாக இருப்பதாக அவர் கூறினார். “நேரடியாக சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்க வேண்டிய திருமாவளவன், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என கேட்க வேண்டிய திருமாவளவன், தி.மு.க. அரசுக்கு தாளம் தட்டுகிறார். சஸ்பெண்ட் செய்தது ஆறுதலாக இருக்கிறது என்று கூறுவதே அவலமாக இல்லையா?” என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்-அப் மரண வழக்கில் இன்று வரை கைது செய்யப்பட்ட 10 பேரும் ஜாமீனில் வெளிவர முடியாமல் திண்டாடி கொண்டிருக்கின்றனர் என்பதை மணி சுட்டிக்காட்டினார். “அந்த அளவுக்கு சட்டம் தன் கடமையை செய்துகொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தை தி.மு.க. பெரிய அளவில் ஊதி ஊதி பெரிதாக்கியது. மேலும், ஊதி ஊதி பெரிதாக்க வேண்டிய விஷயம்தான் அது,” என்று அவர் கூறினார்.

“லாக்-அப் மரணம் என்பது காலகாலமாக நடப்பதுதான். எப்பொழுதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. இறந்தது ஒரு அப்பாவி இளைஞன். ஒரு பத்து பவுன் நகையை அவர் எடுத்திருந்தது உண்மையாக இருந்தால் கூட, அடித்து கொல்ல வேண்டிய அளவுக்கு ஏன் செல்ல வேண்டும்? சட்டத்தை ஏன் காவல்துறை கையில் எடுத்துக் கொள்கிறது? இதையெல்லாம் பார்க்கும்போது, மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகத்தான் அந்த இளைஞர் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்,” என்று மணி குற்றம்சாட்டினார்.

கூடிய சீக்கிரம் தி.மு.க.வும், தி.மு.க.வை ஆதரிக்கும் கட்சிகளும், ‘லாக்-அப் மரணம் என்பது தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிகம்’ என்று ஒரு புள்ளிவிவரத்தை கொண்டு வருவார்கள்,” என்று மணி தெரிவித்தார். இந்த விஷயத்தில் ஸ்டாலின் உடனடியாக நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால், “அவரே சிபிஐ-க்கு இந்த வழக்கை கொடுத்துவிட வேண்டும்,” என்று பத்திரிகையாளர் மணி வலியுறுத்தினார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்-அப் மரணத்தில் தி.மு.க.வுக்கு எப்படி அரசியல் நோக்கம் இருந்ததோ, அதே நோக்கம் தான் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், நயினார் நாகேந்திரனுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இந்த விவகாரத்தை மிகவும் அழகாக செயல்படுத்தினீர்கள். தி.மு.க. இந்தியாவிலேயே மிகச் சிறந்த எதிர்க்கட்சி. அவர்களை போல் எதிர்க்கட்சிகளாக யாரும் செயல்பட முடியாது. 18 ஆண்டுகள் போராடி ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இதேபோல் பல விஷயங்கள் சொல்லலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு துளியும் உரிமை இல்லை. அருணா ஜெகதீசன் அறிக்கையில் சில காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை சொல்லி அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த ரிப்போர்ட்டை தி.மு.க.வின் அமைச்சரவை நிராகரித்தது. எனவே, இந்த அரசுக்கும் முந்தைய அரசுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை,” என்று பத்திரிகையாளர் மணி அழுத்தமாக தெரிவித்தார்.

“எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு எந்த தகுதியும் ஸ்டாலினுக்கு இல்லை. ஆட்சிகள் தான் மாறுகின்றன தவிர, காட்சிகள் மாறவில்லை. நாளை மீண்டும் அ.தி.மு.க. வந்தாலும் இதேதான் செய்வார்கள்,” என்று அவர் கூறினார். மொத்தத்தில், “காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை,” என்றும், “முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருந்தால் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை,” என்றும் பத்திரிகையாளர் மணி தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.