நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில், “எனது அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு குறித்து பேசிய மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா, “அரசியலும் கொள்கையும் வேறு வேறு என்று எந்த முட்டாள் விஜய்க்கு சொல்லிக் கொடுத்தார் என்று தெரியவில்லை. கொள்கையுடன் இருப்பதுதான் அரசியல். இதை முதலில் அவருக்கு சொல்லிக் கொடுங்கள்,” என்று காட்டமாக கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வை வீழ்த்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பழ. கருப்பையா, “தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும். தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கண்டிப்பாக தி.மு.க. வெற்றி பெறவே வாய்ப்பு உள்ளது,” என்று தெரிவித்தார்.
விஜய் தனது முதல் மாநாட்டில், தங்கள் கட்சியுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும், அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன், இதற்குள் சில கட்சிகள் அவரது கூட்டணிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், “ஒரு கட்சி கூட இதுவரை வரவில்லை. எனவே, விஜய்யை யாரும் நம்ப தயாராக இல்லை,” என்று பழ. கருப்பையா மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி என்ற ஒரு மூன்றாவது கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் விஜயகாந்த், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த நிலையில், அந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. விஜயகாந்த் கூட தோல்வியடைந்தார். “அப்படி ஒரு ரிஸ்க்கை மீண்டும் எடுக்க அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. விஜய்யை நம்பி சென்று நட்டாற்றில் விட அவர்கள் விரும்பவில்லை,” என்றும் பழ. கருப்பையா குறிப்பிட்டார்.
“விஜய் முதலில் தன்னை நிரூபிக்க வேண்டும். தனக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்பதை முதல் தேர்தலில் அவர் தன்னை நிரூபித்தால் மட்டுமே, அடுத்த தேர்தலில் அவருடன் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் யோசிப்பார்கள். முதல் தேர்தலிலேயே அவரது தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள்,” என்று பழ. கருப்பையா திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால், பழ. கருப்பையாவின் இந்த கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் வல்லுநர்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 20 சதவீதம் வரை வாக்குகள் இருக்கும் என்று கணித்துள்ளனர். பல அரசியல் விமர்சகர்களும் 10 முதல் 15 சதவீதம் விஜய் கட்சிக்கு வாக்குகள் கிடைக்கும் என்று மதிப்பிடுகின்றனர். “அப்படி இருக்கும்போது, விஜய் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றது போல், எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றது போல் விஜய்யும் வெற்றி பெறுவார்,” என்று அவர்கள் கூறி வருகின்றனர்.