புலன் வழி அறிவால் தான் நமக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது. நாம் புலன் வழியாக அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை பெறுகிறோம். இவையே பஞ்சதன்மாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது.
இருவேறு தோற்றங்களுக்கு இடையே பருமன், வேகம், காலம், தூரம் ஆகியவற்றை ஒப்பிட்டு வேறுபாட்டை உணர்கிறோம். அப்போது உடலுக்கும், உயிருக்கும் இடையே ஏற்படும் உயிராற்றல் சிதைகிறது. அதுதான் பஞ்சதன்மாத்திரை என்று அழைக்கப்படும் ஐம்புலன்கள் பெறும் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிவயற்றின் இயக்க அளவால் உணர்வை பெறுகின்றன. அதுதான் நமக்கு இன்பமாகவோ, துன்பமாகவோ உண்டாகின்றன.
நம் மனமானது உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து விடுகிறது. அது உணர்ச்சிமயமாகி 6 குணங்களாகச் சூழ்நிலைக்கேற்ப மாறுகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும். பழிச் செயல்களும், பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிர், மூளை, வித்து, உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கும்போது அதே செயலைச் செய்ய உயிருக்கு ஒரு தூண்டுணர்வு ஏற்படுகிறது.
அதனால் தான் நம் அன்றாட பழக்கமாக மாறுகிறது. இந்த முறையில் செயல்படும் அறிவை நாம் மயக்கநிலை என்றும் மாயை என்றும் சொல்கிறோம். இந்த மனநிலையில் வாழ்பவர்கள் எப்போதும் துன்பங்களின் உறைவிடமாகவே இருப்பார்கள். அதனால் இவர்களை நடைபிணம் என்பர்.
அறிவுக்கு அறிவு அடிமையாவதே பக்தி. அறிவை அறிவால் அறியப் பழகுதல் யோகம். அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி. அறிவை அறிந்தோர் அதன்பின் அறத்தால் அடைவதே ஞானம். இதை வைத்துப் பார்க்கும்போது அஞ்ஞானம் அறிவின் ஆரம்ப நிலை. விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை. மெய்ஞானம் அறிவின் முழுமை நிலை. இந்த 3 ஞானமும் இயற்கையின் எண்ண நிலை.