வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?

Published:

வைகாசி விசாகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் மற்றும் பழனி பாதயாத்திரை தான். பக்தர்கள் காவடி தூக்குவதும், பால்குடம் எடுப்பதும் பரவசம் தரும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும்? அன்று என்னென்ன சிறப்புகள் உள்ளன என்று பார்ப்போமா…

Kavadi
Kavadi

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யாஜூதம் என்கிற பஞ்ச முகங்களோடு ஈசனுக்கு அதோமுகம் என்கிற ஆறாவது முகமும் வெளிப்படுகிறது. ஆறுமுகங்களிலும் இருக்கும் நெற்றிக்கண் திறக்க அவற்றிலிருந்து வெளிப்படும் அக்னி பிழம்பிலிருந்து எம்பெருமான் அவதரிக்கிறார்.

Lord Muruga 2
Lord Muruga 2

அவர் 1008 இதழ் அடுக்குத் தாமரையில் இருக்கிறார். சிவபெருமானின் கட்டளைப்படி முருகப்பெருமானை கார்த்திகைப் பெண்கள் வளர்க்கின்றனர். 6 பேருக்கும் குழந்தையை வளர்க்கப் போட்டி உண்டாகிறது. அதனால் முருகப்பெருமான் 6 குழந்தைகளாக கார்த்;திகைப் பெண்களிடம் வளர்கின்றனர்.

சிவபெருமானின் தாயார் 6 குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து தன்னிடம் ஆலிங்கனம் செய்து கொண்டார். ஆறு உடலும் ஓருடலானது. ஆறு திருமுகங்களாக முருகப்பெருமான் காட்சி கொடுத்தார். அந்த நாள் தான் வைகாசி விசாகம்.

ஒன்று பட்டதனால அவருக்குக் கந்தன் என்ற பெயர் உண்டு. விசாக நட்சத்திரத்தில் பிறந்ததனால் விசாகன் என்ற பெயரும் உண்டு. வி என்றால் பட்சி என்று பொருள். சாகன் என்றால் பயணிப்பவர் என்று பொருள். மயில் என்கிற பட்சியிலே பயணிக்கும் நாதர் என்பதால் விசாகன் என்று பெயர்.

வள்ளலாரின் சத்யஞான திருச்சபை உருவான நாளும் இதுதான். நம்மாழ்வார் அவதரித்த நாளும் இதுதான். புத்தரின் அவதார தினமாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் வைகாசி விசாகம் விளங்குகிறது.

Lord Muruga
Lord Muruga

முருகப்பெருமானுக்கு அன்றைய தினம் விரதம் இருந்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் என பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.

அன்றைய தினம் அவர்களுக்கு நீர், மோர் வழங்குவது, விசிறியைக் கொடுக்கலாம். இது மிக உயர்ந்த பலனைத் தரும். இந்த இனிய நாளில் முறைப்படி முருகப்பெருமானை வணங்கினால் நமக்கு வெற்றி கிட்டும். அர்ச்சுனன் பாசுபதத்தை வேண்டி தவமிருந்து பெற்ற திருநாளும் இந்த வைகாசி விசாகம் தான்.

அந்த வகையில் இந்த இனிய திருநாள் வரும் 2.6.2023 அன்று காலை 5.55 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 5.54 வரை உள்ளது.

 

மேலும் உங்களுக்காக...