வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?

Published:

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூரை அடுத்த ஆடுதுறைக்கு வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோவில். கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து இங்கு செல்ல பஸ் வசதிகள் உண்டு. நவக்கிரகங்கள் வழிபட்ட சூரியனார் கோவில் இதுதான்… இதன் தலவரலாறைப் பார்க்கலாமா…

Sun God koil
Sun God koil

முன்னொரு காலத்தில் இமயமலையின் வட பகுதியில் அறுவகை குற்றங்களும் நீங்கிய முனிவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் அரன், அரி, அயன் என மும்மூர்த்திகளை வழிபட்டு 4 வேதம், 6 சாஸ்திரம், 18 புராணம், 28 ஆகமங்கள், 64 கலைகள், 96 தத்துவங்கள் என ஆராய்ந்த வண்ணம் இருந்தனர். அவர்களுள் ஒருவர் காலமுனிவர். முக்காலமும் உணர்ந்தவர்.

அவர் ஒரு தடவை தன் எதிர்காலம் பற்றி உணர்ந்தார். அதன்படி விரைவில் தனக்கு தொழுநோய் ஏற்படுவதைக் கண்டுகொண்டார். அதற்காக மனம் வருந்தினார். அவருடன் இருந்த முனிவர்கள் தொழுநோய் வராமல் தடுக்கும் உபாயத்தைக் கூறினார்கள்.

அவர்கள் முனிவரே, சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களை நோக்கி தவம் செய்வீராக. அவர்கள் அருள் செய்தால் தங்களுக்கு ஏற்பட இருக்கும் தொழுநோய் வராமல் போகும் என்றனர்.

அவர்கள் சொன்னபடி காலமுனி இமயலைச்சாரலில் பஞ்சாக்கினி நடுவில் நின்று நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அதன் பயனாக தத்தம் உலகங்களில் உள்ள நவ நாயகர்களிடம் தவ அக்னியின் ஜூவாலை வீசியது.

அதை உணர்ந்த சூரிய பகவான், முதல் நவக்கிரக நாயகர்கள் காலவ முனிவர் முன் தோன்றினர். முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நவநாயகர்களை வணங்கிய முனிவர், என்னைத் தொழுநோய் அண்டாமல் பாதுகாக்க வரம் தர வேண்டும் என்றார். நவநாயகர்களும் அவர் கேட்டபடி வரம் கொடுத்தபடி மறைந்தனர்.

Sooriyanar koil 1
Sooriyanar koil

இதை அறிந்ததும் பிரம்மதேவருக்குக் கடும் கோபம் வந்தது. நவக்கிரகங்களைப் பார்த்து கேட்டார். நவகோள்களே… சிவபெருமானின் ஆணைப்படி காலதேவனின் துணை கொண்டு அனைத்து உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களைக் கொடுக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளோம்.

நீங்கள் எம் கட்டளைக்குக் கீழ்படியாமல் முனிவருக்கு தொழுநோய் வராமல் இருக்க எப்படி வரம் கொடுத்தீர்கள்? அதனால் உங்களுக்கு சாபம் இடுகிறேன். நீங்கள் பூலோகத்தில் அவதரித்து முனிவருக்கு வரும் தொழுநோயால் அவதிப்படுவீராக… என்றார்.

சாபம் பெற்றதும் நவக்கிரக நாயகர்கள் வருந்தினர். பிரம்மதேவனிடம் மனம் வருந்தி சாபநீக்கம் பெற வேண்டினர். மனம் இரங்கிய பிரம்ம தேவர் நவநாயகர்களே நீங்கள் நம் கட்டளையை மீறியதால் உங்களுக்கு சாபம் கிடைத்தது. அது நீங்க வேண்டுமானால் பூலோகத்திற்குச் செல்லுங்கள்.

தென்பாரதத்தில் காவிரி நதிக்கரையில் உள்ள வெள்ளெருக்க வனத்திற்குச் செல்லுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 12 ஞாயிறு வரை தவம் செய்யுங்கள்.

அரன், அரி, அயன் என்ற எங்கள் மூவரையும் நினைத்து உணவின்றி ஒரு மனதாய் தவம் செய்யுங்கள். திங்கள்கிழமை தோறும் அதிகாலையில் காவிரி நீரை திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானையும், உமாதேவியரையும் வழிபடுங்கள். 7 நாழிகைக்குள் வெள்ளெருக்க இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிடுங்கள். தவறாமல் இவ்விரதத்தைச் செய்து வந்தால் உங்கள் சாபம் நீங்கி விடும் என்றார்.

பிரம்ம தேவர் சொன்னபடியே செய்தனர். காவிரி கரையில் உள்ள அந்த வெள்ளெருக்க வனத்தில் கடும் தவம் செய்தனர்.

சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, நவகோள்களே உம்முடைய தவத்தை மெச்சினோம். உங்களைப் பிடித்த தொழுநோய் நீங்கியது. இன்று முதல் இத்தலம் உங்கள் தலமாகத் திகழும். இங்கு வந்து பல துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்களே அனுக்கிரகம் செய்வீர்களாக என்று வரம் அளித்தார்.

அதைக் கேட்டதும், அரியும், அயனும் நவக்கிரகங்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வேலை என்றால் எங்களுக்கு வேலை இல்லையே என்றனர்.

சிவபெருமானும் அவர்களுக்காக சூலத்தால் சூரிய புஷ்கரணி மற்றும் நவ தீர்த்தங்களை உண்டாக்கினார். சூரியனை முதன்மையாகக் கொண்டு இங்கு நவக்கிரகங்கள் தவம் புரிந்ததால் சூரியனார் கோவில் என்று வழங்கப்படும். இத்தலத்திலேயே நவக்கிரகங்களும் ஆலயம் ஏற்படும் என்றார்.

இதைக் கேட்ட அரியும் அயனும் மனம் மகிழ்ந்தனர். அவர்களும் நவக்கிரகங்களை ஆசிர்வதித்தபடி மறைந்தனர். இன்றும் இங்கு சூரிய புஷ்கரணி உள்பட 9 தீர்த்தங்கள் உள்ளன.

அதுதான் தற்போது சூரியனார் கோவில் ஆனது. தல விருட்சம் வெள்ளெருக்கு.

 

 

மேலும் உங்களுக்காக...