திருச்செந்தூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா கந்தசஷ்டி. ஆனால் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் அதிவிசேஷம். இந்த இரு திருவிழாவிலும் நாம் சண்முகரைத்தான் விசேஷமாகக் கொண்டாடுகிறோம். இவர்தான் மும்மூர்த்திகளின் வடிவமாகக் காட்சி தருகிறார்.
அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவனின் ரூபமாகவே அவர் நமக்குக் காட்சித் தருகிறார். ஆவணி, மாசி திருவிழாக்களில் 7 மற்றும் 8ம் நாள் ரொம்பவே விசேஷம். அன்று தான் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி நடக்கிறது. சிவப்பு சாத்தின்னா எம்பெருமான் சிவபெருமானின் ரூபத்தில் முழு அலங்காரமும் சண்முகருக்கு சிவப்புல தான் இருக்கும். சிவப்பு மலர் என அலங்காரம் எல்லாம் சிவப்பாகவே இருக்கும்.
அதற்கு மறுநாள் வெள்ளை நிற மலர், சுவாமி வெண் பட்டு உடுத்தி வெண்ணிறமாகவே பிரம்மாவாகக் காட்சி தருவார். அதற்கு அடுத்த நாள் பச்சை நிற மரிக்கொழுந்து, மாலை, பச்சை வஸ்திரம் சாத்தி சுவாமி பச்சை பசேல்னு இருப்பார். மாமனார் பெருமாளாகவே காட்சி தருகிறார். அதனால் சண்முகரை மும்மூர்த்திகளாக தரிசனம் பண்ணலாம் என்றால் எவ்ளோ சிறப்புன்னு பாருங்க. அதே போல சிவபெருமானின் நடனக்காட்சியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் இன்றுதான் காட்டி அருளினார்.
இன்னைக்கும் சிவப்பு சாத்தி அன்று சண்முகர் முன்பக்கத்திலும், பின்பக்கம் நடராஜராகவும் காட்சி அளித்து வருகிறார். நானும் எங்க அப்பாவும் ஒண்ணுதாம்பா வேற இல்லைன்னு இன்றும் பக்தர்களுக்கு சண்முகர் தரிசனம் காட்டி அருள்கிறார்.
சூரசம்ஹாரம் நடைபெறும் காலத்தில் இந்த சண்முகருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆயுதமாகத் திருக்கரங்களில் சேர்த்து அலங்காரம் செய்வர். பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். கேட்டவருக்குக் கேட்ட வரத்தை ஒரு வினாடி கூட தாமதிக்காமல் கொடுப்பவர் தான் திருச்செந்தூர் சண்முகர். மேற்கண்ட தகவல்களை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.