கொள்கை இல்லை.. களத்தில் இறங்கவில்லை.. கூட்டணி இல்லை.. ஆனாலும் விஜய்க்கு மக்கள் ஆதரவு.. அதற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை அவர் தனது கட்சியின் கொள்கைகள் என்ன, அந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி, களத்தில்…

vijay tvk

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை அவர் தனது கட்சியின் கொள்கைகள் என்ன, அந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி, களத்தில் இறங்கி வேலை செய்வது, கூட்டணி அமைப்பது போன்ற எந்த ஒரு பெரிய முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில், அவருக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதற்கு ஒரே காரணம், திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து மக்களுக்கு செய்த துரோகங்கள்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில்தான் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள படித்தவர்களின் எண்ணிக்கைக்கும், மாநிலத்தில் உள்ள இயற்கை வளங்களுக்கும், இந்நேரம் அது மிகப்பெரிய வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறி இருக்க வேண்டும். ஆனால், வீதிக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள், பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் போதை பொருட்கள், கல்வி விஷயத்தில் மத்திய அரசை எதிர்த்து மட்டுமே அரசியல் செய்யும் நிலைமை ஆகியவை காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதுமட்டுமின்றி, விலைவாசி உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டண உயர்வு என பல்வேறு கட்டண உயர்வுகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும், கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் ஊழல் என்பதும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

எனவேதான், “திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளுமே வேண்டாம்” என்று முடிவெடுக்கும் மக்களின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதாகவும், அந்த வாக்கு சதவீதங்கள் அப்படியே விஜய்க்குப் போனால் அவர் மிக எளிதில் ஆட்சியைப் பிடித்து விடுவார் என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் உடனே அந்த கட்சிக்குக் கொள்கை வேண்டும், அந்தக் கட்சி களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும், போராட்டம் நடத்த வேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. “மக்களுக்கு நான் உண்மையாகவே சேவை செய்ய வந்திருக்கிறேன்” என்ற ஒரு நம்பிக்கையை மட்டும் ஏற்படுத்திவிட்டால் போதும், தானாகவே வாக்குகள் விழுந்துவிடும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.