துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என கூறுகிறார்கள். எதற்காக துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுகிறோம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாக குறிப்பிடுகிறோம். ஆனால் நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் ராகுவிற்கும், கேதுவிற்கும் தனியான நாள் கிடையாது. இதனால் தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகவும், அடுத்த ஒன்றரை மணி நேரம் கேதுவிற்குரிய எமகண்ட நேரமாகவும் சொல்கிறோம்.
ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. ராகு கால துர்க்கை பூஜையில் முதலிடம் பெறுவது, எலுமிச்சைப் பழ விளக்கு.
துர்க்கையின் சன்னதியில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, அந்த தோல் பகுதியை பின்புறமாக திருப்பி, விளக்கு போல் மாற்றி, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, அதில் ஐந்து இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது.
துர்க்கைக்கு ஒற்றை விளக்காக ஏற்றக் கூடாது. ஜோடியாக இரண்டு எலுமிச்சை விளக்குகளை ஏற்றி, தீபத்தின் சுடர் அம்மனை நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும். துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி, மல்லிகை பூ போன்ற மலர்கள் மட்டுமே அணிவிக்க வேண்டும். துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால், அர்ச்சனை முடிந்த பிறகே விளக்கேற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றி விட்டு, மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். பிறகு குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது கோவிலில் அமர்ந்து, துர்க்கை அம்மனை மனதார வழிபட வேண்டும். ராகுவால் உண்டான துன்பங்கள் தீருவதற்காக செய்யப்படும் பூஜை என்பதால் துர்க்கையை வழிபட்ட பிறகு நவகிரகத்தை சுற்ற வேண்டிய அவசியம் இல்லை.
நேராக வீட்டிற்கு வந்ததும், பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது தீபம் எரிய வேண்டும். அது வரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமான மாலை 04.30 முதல் 6.00 மணி வரையிலான நேரத்தில் துர்க்கையை வழிபட்டால் நோய்கள் தீரும். செவ்வாய்கிழமை ராகு கால நேரமான பகல் 3.00 முதல் மாலை 04.30 மணி வரையிலான நேரத்தில் துர்க்கையை வழிபட்டால் திருமண தடை, வாழ்வில் ஏற்படும் பல விதமான துன்பங்கள் போன்றவை நீங்கும்.
வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12.00 வரையிலான நேரத்தில் துர்க்கையை வழிபட்டால் கணவன்-மனைவி பிரச்சனை, பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ராகுகாலத்தில் 2 எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டினால் மனநிறைவான குடும்ப வாழ்க்கை அமையும்.
எலுமிச்சைக்கு மிகப் பெரிய சக்தி இருப்பதால்தான் அது திரி சூலத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் தடுக்க எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதில் மஞ்சள் அல்லது குங்குமம் வைத்து அதை வாசற்கதவின் இருபுறமும் வைப்பது வழக்கம். அதேபோல் கண் திருஷ்டி விலக எலுமிச்சை பழத்தை சுற்றிப்போடுவதும் வழக்கம்.
இப்படிப் பல அபூர்வ பலன்களைக் கொண்ட எலுமிச்சையால் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது திருமணத்தடை நீங்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் தீரும். ராகு தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். கடன் பிரச்சனைகள் தீரும். வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும். தைரியம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.