இன்று (9.10.2022) புரட்டாசி பௌர்ணமி.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது. அதே போல புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புதமான விரதநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரியின் 10ம் நாளில் மகிஷாசுரனை வதம் செய்து அம்பாள் உக்கிரமாக இருந்தாள்.
அதே நேரம் புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று சாந்த சொரூபினியாக அன்னை காட்சி அளிக்கிறாள். இந்த நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும்.
கடன் தொல்லை தீரும். காரியத்தடை விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட அனைத்து நலன்களும் உண்டாகும். திருமண தடை நீங்கும்.
இந்த பௌர்ணமியானது இன்று 9.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.09 முதல் நாளை 10.10.2022 திங்கட்கிழமை அதிகாலை 3.11 மணி வரை உள்ளது.
தட்சிணாயனம் என்றால் சூரியனின் தென்திசை பயணம். தென்திசை நோக்கி உட்கார்ந்த அருள்புரிவதால் தான் அந்த குருபகவானுக்கு தட்சிணாமூர்த்தி என்ற பெயர் வந்தது.
நவக்கிரகத்தில் உள்ள குரு வடக்கு நோக்கி இருப்பார். ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரை உள்ள 6 மாதங்களும் தட்சிணாயன புண்ணிய காலம். தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலம்.
இன்று தேவர்கள் தியானம் செய்து பூரண அருளைப் பெறுவார்கள். இதனால் இன்று நாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வேண்டினால் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
இன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வழிபடுங்கள். சிவனுக்கு வில்வ இலையைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதுவரை ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறி நன்மைகள் நடக்கும்.
இப்படி கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி மனதார வழிபடலாம். லலிதாசகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து குத்துவிளக்கேற்றி வழிபட்டால் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும். வீடு, மனை முதலான செல்வங்களை வாங்கும் பாக்கியம் உண்டாகும்.
கணவன் மனைவி ஒற்றுமை கூடும். இன்று குழந்தை இல்லாதவர்கள் மகாலெட்சுமியை வேண்டி வரம் கேட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்று கிரிவலம் செல்வது சிறப்பு. மேலும் முக்கியமாக குலதெய்வ வழிபாடு ரொம்பவே சிறப்பு. சந்ததிகள் சிறப்பாக வாழ்வர்.