வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. 4 யுகங்களிலும் தொடர்புடையது. குறிப்பாக முனிவர்களின் சாபங்கள், விமோசனங்கள் நடந்த இடமாகக் கருதப்படுகிறது.
இன்றும் அங்கு தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சி துலாபாரம். இது வைகாசி விசாகத்தில் கொண்டாடப்படுகிறது. மிகப்பெரிய சக்திவாய்ந்தவர் வசிஷ்ட முனிவர். இவரது பேரன் பராசர முனிவர். இவரும் தாத்தாவைப் போல ஆற்றல்மிக்கவர்.
விஷ்ணு புராணத்தை முதன் முதலில் இவர்தான் தொகுத்து வழங்கினார். இவரது மகன் வியாசர். இவர் பராசர முனிவருக்கும், சத்தியவதி அம்மையாருக்கும் மகனாகப்; பிறந்தார். வளரும்போது தந்தையின் குறிப்புகளைக் கொண்டு வேதத்தில் தேர்ச்சி பெற்றார்.
இதனால் இவரை ‘வேதவியாசர்’ என்றும் அழைத்தனர். பராசர முனிவர் ஜோதிடத்திலும் வல்லுனர் என்பது குறிப்பிடத்தக்கது. பராசர முனிவருக்கு தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என 6 மகன்கள் உண்டு. இவர்கள் அனைவரும் படுசுட்டி. பெற்றோரது பேச்சைக் கூட கேட்க மாட்டார்கள்.
ஒருமுறை இவர்கள் குளம் ஒன்றில் குளித்தனர். அங்கு இவர்கள் பல வடிவம் எடுத்து விளையாடினர். குளிக்க குளிக்க சுகமாக இருந்ததால் தண்ணீரில் விளையாடி கலக்கி அடித்தனர். இதனால் குளம் மாசானது. அங்குள்ள மீன்கள், தவளைகள், நீர்வாழ் உயிரினங்கள் கடும் அவதிக்குள்ளாயின. சில மீன்களோ செத்து விழுந்தன. இதைக் கண்ட பராசர முனிவர் மகன்களை எச்சரித்தார்.
இந்தக் குளத்து நீர் கங்கைக்குச் சமம். சிவனின் தலையில் இருந்து உற்பத்தியாகி நாட்டு மக்களின் பாவங்களைப் போக்குகிறது. இதைக் கலக்கி அடிக்காதீர்கள். கரை ஏறுங்கள் என எச்சரித்தார்.
ஆனால் பசங்களுக்கோ குளித்து கும்மாளம் அடிப்பதிலேயே குறியாக இருந்ததால் தந்தை சொல்லை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீன்களும் செத்து செத்து விழுந்தன. கொதித்து எழுந்த பராசர முனிவர் தனது மகன்களுக்கு சாபம் கொடுத்தார். இந்தக் குளத்து மீன்கள் எந்தளவு பாதிக்கப்படுகிறதோ, அதே போல நீங்களும் பாதிக்கப்பட்டு வேதனை அடையுங்கள் என 6 பேரையும் மீனாக மாற்றி சாபமிட்டார்.
அப்போதுதான் அவர்களுக்கு தந்தையின் கோபம் தெரிந்தது. உடனே மன்னிப்பு கேட்டனர். சாப விமோசனம் கேட்டனர். அப்போது பராசரர் நீங்க இந்தக் குளத்திலேயே இருங்கள். பார்வதி தேவியின் அருளால் குறிப்பிட்ட காலத்தில் உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.
அவர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளியான 6 தீப்பொறியால் உருவான முருகப்பெருமானை பார்வதி தேவி வளர்த்து வந்தார். சிவலோகத்தில் முருகனுக்கு ஞானப்பால் வழங்கினார். அதில் இருந்து சிறு துளி அந்தக் குளத்தில் விழுந்தது. சாபம் பெற்ற அந்த பராசர முனியின் மகன்கள் மீனாக மாறியவர்கள் ஞானப்பாலைக் குடித்தனர். அதனால் மீண்டும் அவர்களுக்கு ஆற்றல் கிடைத்து சாபவிமோசனம் பெற்றனர்.
6 பேரும் முனிவர்களாக கரை ஏறினர். அவர்கள் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் ஹோமங்கள், பூஜைகள் நடத்தி நன்றி தெரிவித்தனர். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. திருச்செந்தூருக்குச் சென்று முருகனை வழிபடுங்கள். அவர் உங்களுக்கு அருள்புரிவார் என்றது. அதன்படி திருச்செந்தூரில் அவர்கள் நீண்டகாலம் தவம் இருந்தனர். 6 பேருக்கும் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் காட்சி கொடுத்தார்.
திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா 10 நாள்கள் நடக்கும். அதன்படி இந்த பராசுர முனியின் மகன்கள் சாப விமோசனம் பெற்ற நிகழ்ச்சியும் நடக்கும். நாளை மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் நீர்த்தொட்டி அமைக்கப்படும். அதில் 6 மீன் பொம்மைகளைப் போடுவார்கள்.
கதையில் உள்ளபடி நிகழ்வுகள் நடக்கும். அதைக் கண்டுகளித்து முருகனை வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது பக்தர்களின் ஐதீகம். அன்று முருகப்பெருமானுக்கு அரளி அல்லது செம்பருத்தி மலர்கள் கொண்டு வழிபடலாம். பாசிப்பருப்பு பாயாசத்தை நைவேத்தியமாக வைத்து சிறப்பாகவும் வழிபடலாம்.