சிவபெருமானைப் பொருத்தவரை 108 நடனங்கள் ஆடியுள்ளார். அவற்றில் 48 நடனங்கள் தனிநடனம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருவாதிரை தினத்தன்று ஈசன் ஆடிய தாண்டவம்தான். தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜர் நடனகோலத்தில் காட்சி அளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தைக் காண கோடிக்கண்கள் பத்தாது. தேவர்களின் விடியல் என்றால் அது மார்கழி மாதம்தான். அதனால் தான் அந்த மாதத்தில் மட்டும் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனைத் தரிசிக்கின்றனர். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று இறைவனைத் தரிசிப்பது சிறப்பு.
இந்த நாளில் தான் இறைவனின் தாண்டவத்தைக் காண சிதம்பரத்துக்கு தேவர்கள் வருவார்கள். ஆருத்ரா என்றால் நனைக்கப்பட்டவை என்று பொருள். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் இருவரும் திருவாதிரை தினத்தில்தான் சிவபெருமான் ஆடிய திருநடனத்தைக் காண வேண்டும் என்பதற்காக தவம் செய்தார்களாம்.
அவர்களின் தவத்தின் பலன் இறைவனைக் கண்டு கொண்டனர். முனிவர்களை இறைவன் தன் கருணையால் நனைத்து தரிசனம் கொடுத்ததுதான் இந்த தாண்டவம். அதுதான் ஆருத்ரா தரிசனம்.
அது சரி… யார் இந்த பதஞ்சலி முனிவர்? யார் இந்த வியாக்ரபாதர்னு தெரியணும் இல்லையா. பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் என்ற நூலை எழுதியவர். பாம்பு உடல் கொண்டவர் என்றும் கூறுவர். இவருக்கு தமிழகத்தில் 10 இடங்களில் ஜீவசமாதி உண்டென்பர்.
வியாக்ரபாதர் புலிக்கால்களை உடையவர். இவர் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து தனக்கு புலிக்கால்கள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் பெரிய பெரிய கோவில்களில் சிலை உண்டு.