சினிமாவில் முதன் முதலில் பாடலை உருவாக்கி விட்டு வரிகளை எழுதுவார்களா அல்லது இசை அமைத்துவிட்டு அதற்கேற்ப வரிகளை எழுதுவார்களா என்ற கேள்வி சினிமா ரசிகர்களுக்கு எழுவதுண்டு. அதையும் தான் பார்ப்போமா… எம்எஸ்.விஸ்வநாதன் வருவதற்கு முன்பு பாடலை எழுதி விட்டு இசை அமைத்தார்கள்.
எம்எஸ்வி. வந்த பிறகு இருவகையாக இசை அமைத்தனர். மாலையிட்ட மங்கை படத்தில் வந்த பாடல்கள் எல்லாமே எழுதப்பட்டு இசை அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு அந்தப் படத்தில் பிரபலமான செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இப்படித்தான் எழுதப்பட்டது.
அதே போல மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று காலம்காலமாக விவாதம் நடப்பதுண்டு. எம்எஸ்வி.க்குப் பிறகு 90 சதவீத பாடல்களை மெட்டுக்குத்தான் போட்டார்கள். ஒரு சில பாடல்கள் மட்டுமே எழுதிய பின் இசை அமைக்கப்படுகிறது. அதுதான் இன்று வரை தொடர்கிறது.
இதை வைத்துப் பெரிய பட்டிமன்றமே நடத்திவிடலாம். அந்தவகையில் இசை அமைப்பாளர்கள் தாங்கள்தான் பெரியவர்கள் என்பதுபோலவும், கவிஞர்கள் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்பது போலவும் நடந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் நமக்கு என்ன பாட்டு கிடைச்சா போதும்னு கவலையை மறந்து பாடல்களை ரசிக்கும் ரசிகர்களே பலரும் உள்ளனர். எது எப்படியோ நமக்கு நல்ல பாடல்கள் கிடைத்தால் போதும் என்பது தான் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எம்எஸ்வியின் ஆதிக்கம் குறைந்து போனது. 80களில் ஆரம்பித்த இளையராஜாவின் இசை இன்று வரை நம்மை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நனைத்துக் கொண்டே இருப்பது ஆச்சரியம்தான்.