கடவுளை வழிபடுகிறோம். பூஜை அறையில் நைவேத்தியம் வைக்கிறோம். ஆனால் அதை எப்போது எடுப்பது என தெரியாது. நாம் படைக்கும் உணவுகளை இறைவன் ஏற்றுக் கொண்டு, மனம் மகிழ்ந்து, நமக்கு அருளை வழங்குவதாக ஐதீகம்.
இதனால் வீட்டில் பூஜை செய்வதாக இருந்தாலும், கோவிலுக்கு சென்று வழிபடுவதாக இருந்தாலும் ஏதாவது ஒரு உணவை நைவேத்தியமாக படைக்கிறோம். எதுவும் படைக்க முடியாவிட்டாலும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மட்டுமாவது வைத்து வழிபட வேண்டும் என்பது நியதி.
வீட்டில் பூஜை செய்யும் போது நாம் சாதாரணமாக சமைத்த உணவை இறைவன் முன்பு வைத்து விட்டு, பிறகு எடுத்து நாம் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் இறைவன் முன்பு நைவேத்தியம் வைப்பதற்கும், பூஜைக்கு பிறகு அதை எடுப்பதற்கும் கூட விதிமுறைகள் உள்ளது.
அதே போல் எடுத்த பிரசாதத்தை நாம் எப்போது சாப்பிட வேண்டும் என்பதற்கு கூட விதிமுறைகள் வகுத்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் சரியாக செய்யாத போது எதிர்மறை விளைவுகளை பெறுகிறோம்.
ஒவ்வொரு விசேஷ நாளின் போதும், அந்த நாளுக்குரிய மற்றும் அந்த தெய்வத்திற்குரிய உணவை நைவேத்தியமாக படைப்பது இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். நைவேத்தியம் படைக்காமல் செய்யப்படும் பூஜை பூர்த்தி ஆகாது என்பது நம்பிக்கை. பாயசம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் என பலவகையான உணவுகளை நாம் நைவேத்தியமாக படைப்பதுண்டு.
நைவேத்தியமாக படைக்கும் உணவுகளில் உப்பு, காரம் சரி பார்ப்பது கிடையாது. அதே போல் வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாது. சாத்வீகமான உணவுகளை மட்டுமே நாம் படைக்க வேண்டும்.
சுவாமிக்கு நைவேத்தியம் படைப்பதில் எப்படி முறைகள் உண்டோ, அதே போல் படைத்த நைவேத்தியத்தை பிரசாதமாக நாம் எடுப்பதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. இவற்றை முறையாக பின்பற்றாவிட்டால் கடவுளின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும்.
கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கும் உணவுகளை பூஜை முடிந்ததும் எடுத்து நாமும் பிரசாதமாக சாப்பிட்ட பிறகு, மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக படைத்த உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கக் கூடாது.
இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உருவாக துவங்கி விடும்.
கடவுளுக்கு முன் நைவேத்தியமாக படைத்த உணவு 15 முதல் 30 நிமிடமாவது இருக்க வேண்டும். அதன்பின்னர் தான் நாம் எடுக்க வேண்டும்.