இறைவனை வணங்க எது தேவை? கடவுளிடம் இதை மட்டும் வேண்டுங்க….உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்..!

Published:

இறைவனிடம் நாம் வேண்டும் போது அதைக் கொடு…இதைக் கொடு என அப்போது என்ன தேவையோ அதையேத் தான் கேட்போம். ஆனால் அதற்கும் மேல ஒன்று உள்ளது என்பதை நாம் அறிய மாட்டோம்.

எதை வேண்டினால் எல்லாம் கிடைக்குமோ அதை வேண்ட வேண்டும். அதே நேரம் இறைவனை வேண்டுவது எப்படி என்றும் தெரிந்து கொள்வது அவசியம். அதைப்பற்றி இன்றைய பாடல்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

திருப்பள்ளி எழுச்சியின் 3வது பாடலை இன்று மார்கழி 23 (7.1.2023) ஆம் நாளன்று பார்ப்போம்.

Markali 23
Markali 23

கூவின பூங்குயில் கூவின கோழி என ஆரம்பிக்கிறது இன்றைய பாடல். இயற்கை வர்ணனை, அழகு, ரசனை என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு ஒருபொருளாக நான் உன்னை வழிபட வந்து இருக்கிறேன் என்கிறார் மாணிக்கவாசகர். மனம் ஒருமைப்பட்டு வழிபட எனக்கு அருள்புரிவாய் இறைவா எனவும் வேண்டுகிறார். இறைவனை வணங்கக்கூடிய நேரம் குறைவாக இருந்தாலும் மனதை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

வள்ளலாரும் தன் பாடல் ஒன்றில், ஒருமையுடன் நினது திருமலர் நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என சென்னை கந்தக்கோட்டத்தில் முருகப்பெருமானை வேண்டுகிறார்.

முதல் அடியைப் பார்த்தால் மனம் ஒருநிலையில் இருந்து இறைவனை வழிபட வேண்டும். அதுதான் முற்றுப்பெற்ற வழிபாடு.

கடமைக்காகவும் அவசர அவசரமாக பூஜை செய்யக்கூடாது. மனம் ஒருமைப்படவில்லை என்றால் அது பூஜையாகாது. என்னால் மனம் ஒருமைப்பட்டு இறைவனை வணங்க முடியவில்லை. அதனால் அப்பேர்ப்பட்ட நல்லவர்களின் உறவையாவது எனக்குக் கொடு. அந்த மன ஒருமைப்பாட்டை அவர்களிடம் இருந்தாவது கற்றுக்கொள்ளலாம் என்கிறார் மாணிக்கவாசகர்.

இறைவனை எந்த மை போட்டும் மயக்கமுடியாது. அதற்கு ஒரே மை தான் உள்ளது. அந்த ஒரு மை தான் ஒருமை. அதாவது மன ஒருமைப்பாடு. இது மட்டும் நமக்கு இருந்தால் இறைவனை வசப்படுத்திவிடலாம். இனியாவது மன ஒருமைப்பாட்டுடன் இறைவனின் திருவடியை வணங்குவோம்.

ஆண்டாள் இன்றைய மார்கழி 23ம் நாள் பாடலில் மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்று ஆரம்பிக்கிறார்.

Thiruppavai 23
Thiruppavai 23

இந்தப்பாடலில் நாச்சியார் நரசிம்ம மூர்த்தியின் வெளிப்பாடு எப்படி இருக்கு என்று இந்தப்பாடலில் சொல்கிறார். ஒரு குகையில் இருந்து சிங்கம் புறப்பட்டு வந்தால் எத்தனை வேகத்தில் இருக்கும்? வேகமாக வந்து பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாஞ்சையுடன் நரசிம்மமூர்த்தி வருவதைப் பற்றி இங்கு சொல்கிறார்.

கடவுளிடம் எப்போதும் மோட்ச நலனையே வேண்ட வேண்டும். அற்பமான விஷயங்களைப் போய் வேண்டக்கூடாது.

குசேலர் கிருஷ்ணரின் ஆத்ம நண்பர். கிருஷ்ணர் நாட்டுக்கு ராஜாவாக வாழ்கிறார். குசேலர் வறுமையில் வாழ்கிறார்.
தாங்கமுடியாத வறுமையால் துன்பப்படுகிறார். ஒருநாள் அவரது மனைவி கிருஷ்ணர் நண்பர் தானே…அவரிடம் போய் நம்ம நிலைமையை சொல்லுங்க.

அவர் ஏதாவது செய்வார் அல்லவா என்கிறார். குசேலர் ஏற்பது இகழ்ச்சி என்கிறார். வறுமையை சொல்லி நான் கஷ்டப்படுறேன்…எனக்கு உதவி செய்யுங்கன்னு கேட்கறதைப் போல இழிவான செயல் எதுவுமே கிடையாது என மறுக்கிறார்.

அப்படின்னா சும்மாவாவது போய் பார்த்துட்டு வாங்க என்கிறார். அப்படிப் பார்க்கும் போது கண்ணனின் பார்வை இவர் மேல் படும். அப்போதாவது நம் கஷ்டங்கள் நீங்குமே என்ற ஆவலில் இப்படி சொல்கிறார். அதற்கு ஆமா…எனக்கும் என் நண்பனை வெகுநாளாகப் பார்க்கணும்னு ஆசை என்கிறார்.

அப்படின்னா ஏதாவது செஞ்சு கொடு என்கிறார். அப்படின்னா கொஞ்ச நாள் பொறுங்க. நான் நமக்குக் கிடைக்குற நெல்லை சிறிது சிறிதாக சேர்த்து வைத்து கண்ணனுக்காக அவல் செஞ்சு தர்றேன் என்கிறார். அதேபோல் ஒரு சிறிய அவல் மூட்டையைக் கொடுத்து அனுப்புகிறார். கண்ணனைப் பார்க்கச் செல்கிறார் குசேலர்.

தூரத்தில் பெரிய வரிசை நிற்கிறது. அது எங்கே போகிறது என்றால் குறுநில மன்னர்கள் எல்லாம் கண்ணனுக்குக் கப்பம் கட்டச் செல்கிறது. எல்லோரும் வைர, வைடூரியங்களுடன் வரிசையில் நிற்கின்றனர். நாம எங்கே வரிசையில போக…ன்னு அரண்மனையைச் சுற்றி சுற்றிப் பார்க்கிறார்.

அப்போது காவலாளி நீ யாரு? ஏன் இப்படி சுற்றி சுற்றிப்பார்க்குற….என்ன வேணும்…? எனக் கேட்கிறார். அதற்கு கண்ணன் என் நண்பன். அவரு உங்க நண்பனா? என ஆச்சரியத்துடன் கேட்கிறார் காலாளி. நிஜமான நண்பன் தான். உங்கள் நண்பனாம்…குசேலர் வந்து இருக்கிறார் என்கிறார். கேட்டதுதான் தாமதம்…ஓடோடி வருகிறார்..

குசேலரைக் கட்டிப்பிடித்து பழைய கதைகளை எல்லாம் இருவரும் பேசுகின்றனர். அவலை வாங்கி சாப்பிடுகிறார். தாயார் கடைக்கண் பார்வையில் கண்ணனிடம் அவருக்கு உதவுமாறு சொல்கிறார். அண்ணா உங்களுக்கு என்ன வேண்டும் என குசேலரிடம் கிருஷ்ணர் கேட்கிறார்.

கண்ணா உன் நட்பு ஒன்றே போதும் என்கிறார். பின்னர் வீட்டுக்கு வருகிறார். வந்து பார்த்தால் ஆச்சரியம்…வீட்டில் செல்வங்கள் அத்தனையும் இருந்தன. ஏன் எனக்கு இத்தனை செல்வங்கள் கொடுத்தாய் கண்ணா என்று கேட்கிறார்? இது உனக்காகக் கொடுக்கவில்லை.

உன்னை நம்பி வளரும் குழந்தைகளுக்காகக் கொடுத்தது. இளமையில் வறுமை மிகக் கொடிது..அதனால் தான் தந்தேன் என்கிறார். அதனால் இறைவனிடம் நாம் எப்போதும் சிறு சிறு விஷயங்களைக் கேட்கக்கூடாது.

எங்களுக்கு எல்லா நலன்களையும் கொடு. உன்னையே நாடி வந்திருக்கிறோம் என்கிறார் ஆண்டாள்.இறைவனையே வேண்டிப் பெற வேண்டும் என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.

 

 

மேலும் உங்களுக்காக...