பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?

By Sankar Velu

Published:

வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்க்கரசி தனது சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்க்கலாமா…

முதலில் ஆன்மாவின் சிறுமையை நினை. ‘நான்…. நான்’ என்ற ஆணவத்துடன் இருக்கக்கூடாது.

நம்மால் ஆகக் கூடிய காரியம் எது? பஞ்சபூதங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதன் செயலில் ஏதாவது ஒன்றை நிறுத்த முடியுமா? நான் முதலில் சிறியவன் என்று நினை. அப்படி நினைத்துப் பார்த்தாலே ஆண்டவன் எவ்வளவு பெரியவன் என்று நமக்குத் தெரிந்து விடும். கோவிலில் போய் நிற்கிற போது நம் உடல் உணர்வதைப் பார்க்கலாம்.

Vallalar
Vallalar

அதைத்தான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து, பொங்கிப் பெருகி ஊற்றெழும் கண்ணீர் அதனால் நனைந்து நனைந்து என்று வள்ளல் பெருமான் இறைவனை வழிபடுவது குறித்து பாடுகிறார். பக்குவம் ஆனால் தான் அந்த ஆன்மாவின் சுவை என்ன என்பது நமக்குத் தெரியும். காயைப் பிழிந்தால் சாறு வராது. ஆனால் பொறுத்திருந்து காத்திருந்து அந்தக் காய் பக்குவமாகி கனியானதும் பிழிந்தால் சாறு வரும்.

மனம் எங்கே யர்ருக்கு பக்குவம் அடைந்து இருக்கிறதோ அவர்களுக்கு கடவுளிடம் சரணடைந்து வழிபடுபவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். வள்ளல் பெருமானாருக்கு அந்தப் பக்குவம் இருந்ததனால் அவர் எப்போதெல்லாம் நடராஜ பெருமானை வழிபடுகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு ஆனந்தக் கண்ணீர் ஆறெனப் பெருகி ஓடும்.

கடவுளை அவர் கூப்பிடுகிறார். அருளமுதே, நந்நிதியே, ஞானநடனத்தரசே, என் உரிமை நாயகனே… எவ்வளவு அழகா சொல்கிறார். யாருக்கிட்ட எனக்கு உரிமை இருக்குதோ அவருக்கிட்ட தான் அன்பு, பாசம், கண்ணீர், காதல் எல்லாம் வரும். எனக்கு அவன் உரிமை ஆனவன்னு நினைக்கிறேன்.

அப்போ இந்தக் கண்ணீருக்குக் காரணம் நீதானே… இன்னொரு இடத்தில் சொல்கிறார். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் வள்ளலாரின் குடிலுக்கு நடுராத்திரியில் வந்து அவர் தூங்கும் நேரம் எழுப்புகிறார். அதை இவ்வாறு சொல்கிறார். பாதி இரவில் எழுந்தருளி; பாவி எனை எழுப்பி அருள் வைத்து என்று அழுத்தமாக சொல்கிறார். இறைவனே நேராக வந்து தரிசனம் தந்தவர்.

கண்ணாடியில் முருகனைப் பார்த்தவர். அவர் எவ்வளவு பெரிய பக்தர்.! இறைவன் நடராஜரைப் பார்த்ததும் எப்பேர்ப்பட்ட ஆனந்தம்? என்ன சொல்றதுன்னு தெரியல. அம்பலத்தரசன் அல்லவா? வள்ளலார் சுவாமின்னு சொன்னாரு. அவர் வள்ளலாருடன் ஊனில் கலந்து உயிரில் கலந்து உடலில் கலந்து என இப்போது வள்ளலாருடன் நடராஜர் இரண்டற கலந்து விட்டார்.

Vallalar Kudil
Vallalar Kudil

அப்போது ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்போது தான் நான் உன்னில் கலந்து விட்டேனே… எதற்காக இப்படி அழுகிறாய் என நடராஜர் கேட்கிறார். அதற்கு இந்த அற்புதமான அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது. என் உடலில் உள்ள ரோமங்கள் எல்லாம் தித்திக்கும் இந்த இனிய அனுபவம் எனக்கு மட்டும் கிடைத்தால் போதாது. இந்த உலகில் உள்ள யாவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறார்.

அதைத்தான் “ஓதி முடியாது யாரும் என்போல்… உலகம் பெற வேண்டுவனே” என்றார் வள்ளலார். அவர் இந்த சாதியினர், இந்த மதத்தினருக்கு மட்டும் இந்த அருள் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல வில்லை. உலக மக்கள் யாவருக்கும் கிடைக்க வேண்டும் என்றார். அதனால் தான் அவர் அவதார புருஷர்.