இறைவனை ஜோதிமயமானவனாக நாம் தரிசிக்க காரணம் இதுதான்..! நல்ல மருமகள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

By Sankar Velu

Published:

பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும்? பொறந்த வீட்டிலும் சரி. புகுந்த வீட்டிலும் சரி..நல்ல பேர் வாங்கினால் தான் நம் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கும்.

அந்த வகையில் இன்றைய இனிய நாளான மார்கழி 18 (2.1.2023)ல் மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

Markali 18
Markali 18

அண்ணாமலையான் அடிக்கமலம் என்று தொடங்குகிறது இன்றைய பாடல். இதில் மாணிக்கவாசகர் அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் என்று சொல்கிறார். அதாவது எம்பெருமானைத் தஞ்சமடையும் தேவர்கள் தலையில் நவரத்தினங்கள் நிறைந்த கிரீடத்தை அணிந்துள்ளனர்.

அந்த ஒளி எல்லாம் பெருமானின் திருவடி பக்கத்தில் போன உடனே ஒளி மங்கி விடுகிறது. அப்படி பேரொளி படைத்தவர் எம்பெருமான். இதில் பெண்ணாக, ஆணாக, அலியாகவும் இருக்கிறார் என்கிறார். அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் இறைவன் என்கிறார் மாணிக்கவாசகர்.

இங்கு அலி என்று குறிப்பிடுவது திருநங்கைகள். அவராகவும் இறைவன் இருக்கிறார் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவது புதுமை. எல்லா ரூபத்திலும் இறைவன் வருகிறார் என்பதைத் தான் இங்கு குறிப்பிடுகிறார்.

கம்பரும் ராமருடைய திருமேனியைப் பற்றி ஒரு பாடலில் ராமனின் திருவடியில் இருந்து வந்த ஒளியானது ஆதித்தனின் ஒளியை மங்கச் செய்தது என்கிறார். இதைத் தான் வள்ளல் பெருமானும் ஜோதி வழிபாடாக செய்து வந்தார். இறைவன் அருவமாகவும் இருக்கிறார். உருவமாகவும் இருக்கிறார்.

Ramar
Ramar

கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனைப் பற்றி சொல்லும்போது அருவமும் உருவமுமாகி அநாதியாய் என்று பாடுகிறார். திருவண்ணாமலையின் தாத்பரியமே இறைவன் ஜோதிமயமானவன் தான். அவரை எல்லோரும் அப்படி புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான் அவருக்கு ஒரு வடிவம் போட்டு ரூபமாகக் காட்டினர்.

அந்த உருவத்தின் மீது லயிக்க லயிக்க அந்த ஜோதியையே நாம் இறைவனாகப் பார்த்து ஆன்ம ஜோதியாக நாம் எப்போது உள்ளுக்குள் பார்க்கிறோமோ அப்போது ஞான நிலையை அடைகிறோம் என்ற உயர்சிந்தனையைத் தான் இந்த ஜோதிவழிபாடு விளக்குகிறது.

மாணிக்கவாசகரும் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை யான் பாட என்றும் சொல்வதைப் பார்க்கலாம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார் வள்ளலார். ஞானம் இருந்தால் உள்ளே இருக்கும் ஜோதியை நிச்சயமாக நாம் காணலாம்.

ஆண்டாள் இன்றைய பாடலில் உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் என்கிறார்.

Aandal 18
Aandal 18

நாச்சியார் நந்தகோபனின் மருமகளே நப்பிண்ணாய் எழுந்தருள்வாய் என்கிறார். நீ எழும்பி உன் கண்ணனையும் எங்களுக்காக எழுப்பி இங்கு வர வேண்டும் என்கிறார். உறவுகளின் வலிமையை இந்தப் பாடலில் வெகு அழகாக சொல்கிறார் ஆண்டாள்.

தான் பிறந்த வீட்டுக்கு அவள் நல்லவள் என்று சுலபமாக பேர் வாங்கி விடுவாள். பெற்றோர் அந்தக் குழந்தையைப் போற்றிப் புகழ்ந்து வளர்ப்பார்கள். ஆனால் புகுந்தவீட்டில் நல்ல பேர் வாங்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம். எல்லாரும் குறை சொல்வார்கள்.

இங்கு நப்பிண்ணை எல்லாருடைய ஈர்ப்புக்கும் உரியவளாக இருக்கிறாள். அதனால் தான் ஆண்டாள் ஒரு மருமகளிடம் சொல்லி கண்ணனை எழுப்புகிறார். பெண்ணாகி பெருமை சேர்ப்பதை விட மருமகளாகவும் பெண்கள் சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பாடல் வலியுறுத்துகிறது. நப்பிண்ணையை ஆண்டாள் எழுப்ப என்ன காரணம்? கோவிலுக்குப் போனதும் நேரா மூலஸ்தானத்துக்குப் போய்விடக்கூடாது. முதலில் தாயாரைத் தான் வணங்க வேண்டும்.

நீங்க கொஞ்சம் சுவாமிக்கிட்ட போய் என் கஷ்டத்தை எடுத்துச் சொல்லுங்க என்று வேண்டுகோள் வைக்க வேண்டும். அம்மாவிடம் தான் முதலில் சொல்ல வேண்டும். அப்போது தான் அப்பா நமக்கு அதை வாங்கித் தருவார். அதே போல் தான் பக்தியும். முதலில் தாயாரிடம் நம் குறைகளை சொல்ல…அவர் மூலம் பெருமான் நமக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார் என்பதையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

 

 

மேலும் உங்களுக்காக...