முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
திருச்செந்தூர்: கடல் அலை ‘ஓம்’ என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் ‘அலைவாய்’ என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார்.
போர்புரிந்த இடம் : சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார்.
அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.
பழனி: ஆறுபடைவீடுகளில் ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது.
அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.
சுவாமி மலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார்.
அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலைதந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான்.
முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.
பழமுதிர்ச்சோலை: நக்கீரர், ‘இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே’ என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.