திருமணம் செய்யப் போகிறீர்களா? வேண்டாமே இந்த வீண் தம்பட்டம்..!

தனி மனித மாற்றமே சமுதாயத்தை மாற்றுகிறது. அதனால் சமுதாயமே சரியில்லை என்று நினைக்காதீர்கள். நாம் தான் மாற வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முதல் நாள் நமது…

தனி மனித மாற்றமே சமுதாயத்தை மாற்றுகிறது. அதனால் சமுதாயமே சரியில்லை என்று நினைக்காதீர்கள். நாம் தான் மாற வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முதல் நாள் நமது சடங்கு முறைகள் என்பது நமது கலாச்சாரத்தில் இல்லை. ரிசப்ஷன் என்ற அந்த நிகழ்வு தேவையே இல்லை.

இதற்கு என்ன காரணம்னா ரிசப்ஷன் என்பது நம் சமுதாயத்தில் உள்ள சடங்குகள் என்று எதுவும் நடைபெறுவதில்லை. இது மேற்கத்திய பாணி. அதே போல கோட் சூட் அணிந்து கொண்டாடுவது நம் கலாச்சாரம் அல்ல. ஒத்து வராத கேலிக்கூத்துக்கள் தான் இன்றளவில் அதிகமாக நடைபெற்று வருகிறது.

திருமணம் என்பது காலத்தால் அழியாத தொடர் இனிய நினைவுகள். இந்தப் பந்தம் ஆயிரம் காலத்துப் பயிர்னு சொல்வாங்க. மணமக்கள் குடும்பத்தாரின் பெயர்களை அடுத்த ஏழேழு தலைமுறைகளும் கூற காரணமாக உருவாகும் சொந்தம் தான் இது.

நமது கலாச்சாரப்படி காலையில் திருமணம் செய்து தொடர்ந்து குடும்பத்துடன் சென்று சடங்குமுறைகளைச் செய்ய வேண்டும். மணமக்களைப் பெரியோர்கள் ஆசிர்வதிப்பர். திருமணத்துக்குச் செல்லும் தாய்மார்கள் தலைவிரி கோலத்துடன் கலந்து கொள்ளக்கூடாது. இப்போதெல்லாம் ஃப்ரீ ஹேர் ஸ்டைல்னு சொல்றாங்க. அது தலைவிரி கோலம்தான். தலைசீவி பூ பொட்டு வைத்து பாரம்பரிய உடை அணிந்து செல்வது தான் லட்சுமி கடாட்சமாக இருக்கும்.

மணமேடையில் காலில் செருப்பு அணியாமல் கலந்து கொள்வது முக்கியம். பலர் அங்கும் பந்தாவாக ஷூ போட்டு நிற்கின்றனர். ஆண்கள் தாடி வைத்தபடி திருமணம் செய்யக்கூடாது. மணநாள் அன்று தாடியுடன் இருப்பது குடும்பத்துக்கு ஆகாது. திருமணத்திற்கு வரும் ஆண்கள் வேட்டி, சட்டையுடன் வந்து பண்பாட்டை நிலைநாட்ட வேண்டும். திருமணத்தில் சினிமா கூத்தாடிகள் மாதிரி விதவிதமாகப் போட்டோ ஷூட் நடத்தக்கூடாது. இப்போது கல்யாணத்துக்கு முன்னாடியே திருமணம் ஆபாசமாக போட்டோ எடுக்குறாங்க. அதுமட்டும் பத்தாதுன்னு பொதுமக்கள் பார்க்குற மாதிரி போஸ்டர் வேற அடிக்கிறாங்க. சகிக்க முடியலை.

அதையும் மணமக்களின் பெற்றோர்கள் எதுவும் கேட்க முடியாமல் கையைப் பிசைந்தபடி நிற்கின்றனர். இது பார்க்கவே வருத்தமாக உள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை பசங்க பெற்றோருக்குக் கொடுக்கக் கூடாது. மாடர்ன் என்கிற மாயவலையில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று நாம் தான் உறுதியேற்க வேண்டும்.