பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். சும்மா நாம செவனேன்னு நம்ம வேலையைப் பார்த்தா பாம்பு என்ன செய்யப் போகுதுன்னு கேட்பார்கள். வாஸ்தவம்தான். நாம தெரியாமல் பாம்பை மிதித்து விட்டால் என்ன செய்வது? ஒரே கொத்தாக கொத்தி நம் உயிரை வாங்கி விடும் அல்லவா? அதற்கு நாம் பலியாகலாமா? அப்படின்னா அதுகிட்ட இருந்து தப்பிக்க என்ன செய்வது? சிலர் பாம்பைக் கண்டுவிட்டால் அதை எப்படியாவது அடித்துக் கொல்லவே நினைப்பர். அதன்பிறகு அங்கு வரவிடாமல் தடுக்க என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டும். அதுதான் நமக்கு உறுதியான பாதுகாப்பைத் தரும். வாங்க என்ன செய்வதுன்னு பார்ப்போம்.
மழைக்காலத்தில் நாம் கோடைகாலத்தை விட மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக நம் வீட்டுத் தோட்டத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அங்குதான் பாம்பு நடமாட்டம் இருக்கும். மழைக்காலத்தில் செடி கொடிகளுக்கு இடையில் அது வசதியாக நடமாடும். அதனால் வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பது அவசியம். தேவையில்லாத களைச்செடிகளை அகற்ற வேண்டும்.
பாம்பிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க சில செடிகளை வீட்டுத் தோட்டத்தில் நட்டு வைக்கலாம். அவை பாம்புகள் வீட்டில் நுழைவதைத் தடுக்கும். அதெப்படின்னு கேட்குறீங்களா? புரிகிறது. அந்தச் செடிகளின் வாசனைக்கே பாம்பு வராது. அவை என்னென்னன்னு பார்க்கலாமா…
புதினாவின் நறுமணத்திற்கு பாம்புகள் அண்டாது. அதே போல பூண்டு மற்றும் வெங்காயச் செடிகளுக்கு ஒரு வித கந்தக வாசனை உண்டு. அது பாம்புவை நெருங்க விடாது. சாமந்திப் பூவில் இருந்து வரும் வாசனையும் பாம்புகளை ஓடச் செய்துவிடும். இது வீட்டின் அழகுக்கு மட்டுமல்ல. பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. பால்கனியிலும் நட்டு வளர்க்கலாம். எலுமிச்சைப் புல்லையும் நட்டு வளர்த்தால் நல்ல பலனைத் தரும். இது பாம்புவை மட்டுமல்ல. கொசுக்களையும் விரட்டி அடிக்கும்.