நிம்மதியைத் தேடித் தேடி அலைவோருக்கு அது இருக்கும் இடம் தெரிவதில்லை. பணம் இருந்தா போதும். எல்லாமே கிடைச்சிடும்னு சொல்வாங்க. அதுக்காக நிம்மதியுமா கிடைக்கும்? சொல்லப்போனா பணக்காரங்களை விட பணம் இல்லாதவங்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் நிம்மதியா இருப்பாங்க. அவங்க தேவைக்கு பணம் சம்பாதிப்பாங்க. கொஞ்சமா சேர்த்து வைப்பாங்க. ஆனா நிம்மதியா இருப்பாங்க. சந்தோஷமா இருப்பாங்க. பணம் சேர சேர அதை எப்படி பாதுகாப்பது? பிள்ளைகளுக்கு எப்படி சொத்தைப் பங்கிடுவதுன்னு நிம்மதி இல்லாமப் போயிடும்.
பரவாயில்லைன்னு சிலர் சொல்வாங்க. ஆனா அதைவிட அதிக வலி தரும் வார்த்தை என்ன தெரியுமா? பழகி விட்டதுன்னு சொல்வாங்களே. அதுதான். எவ்ளோ வலி இருந்தாலும் எப்படிம்மா சமாளிக்கிறீங்கன்னு பக்கத்து வீட்டுக்காரங்க கேட்டா பழகிடுச்சுன்னு அசால்டா சொல்வாங்க. ஆனா அதுக்குள்ள எவ்ளோ வலி இருக்குன்னு அவங்களுக்குத் தான் தெரியும்.
உழைக்க வேண்டிய வயசு இதுதான்னு ஓடிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அவங்க தான் கடைசி வரைக்கும் உழைச்சி உழைச்சி ஓடாத் தேய்ஞ்சி வாழ வேண்டிய வயசில வாழாமப் போயிடுவாங்க. நல்லா இருக்குறது வேற. நிம்மதியா இருக்குறது வேற. இங்க நிறைய பேர் நல்லா இருக்கேன்னு மட்டும்தான் சொல்வாங்க. ஆனா நிம்மதியா இருக்காங்களான்னு கேட்டா இல்லன்னு தான் பதில் வரும்.
வாழ்க்கையில நிம்மதியா இருக்கணும்னா ரெண்டே ரெண்டு வழிகள்தான் இருக்கு. ஒண்ணு நம்முடைய பிரச்சனையை அடுத்தவரிடம் சொல்லாமலே இருப்பது. அடுத்து மற்றவருடைய தனிப்பட்ட பிரச்சனையில் தலையிடாம இருக்குறது. இதுல நீங்க எந்த ரகம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.