2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களில் முதலீடுகள் அள்ளிக்கொட்டியதால், மூத்த நிர்வாகிகளை பணியமர்த்தும் போக்கு அதிரடியாக அதிகரித்திருக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மூலதன முதலீடுகள் சுமார் 2.96 பில்லியன் டாலர்களை தொட்டு, காலாண்டுக்கு 24% மற்றும் ஆண்டுக்கு 21% என வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்த அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, ஸ்டார்ட்அப்கள் தங்கள் செயல்பாடுகளை பெருக்கவும், சிறப்பான நிர்வாகத்தை கொண்டு வரவும் துணைத் தலைவர்கள், மூத்த துணைத் தலைவர்கள் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரிகள், தலைமை நிதி அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளில் உள்ளோரை தேடித்தேடி நியமித்து வருகின்றன.
வேகமாக வளர்ந்து வரும் பல ஸ்டார்ட்அப்கள், தங்கள் தலைமைத்துவ அணியை வலுப்படுத்துவதன் மூலம் இந்த ஆள்சேர்ப்பு பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன:
பேட்டரி ஸ்மார்ட் என்ற பேட்டரி மாற்று சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம், நகரங்கள் தோறும் தனது சேவைகளை விரைவாக விரிவாக்க, உயர்நிலை அதிகாரிகளை பணியமர்த்துகிறது.
நவ்கதி என்ற எரிபொருள் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் ஸ்டார்ட் அப் நாடு தழுவிய விரிவாக்கத்திற்காக தலைமைப் பதவிகளுக்கான ஆட்களை தேடி வருகிறது.
பெட்டர் நியூட்ரிஷன் என்ற ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு பிராண்ட் ஸ்டார்ட் அப் தனது பிராண்ட் உருவாக்கம் மற்றும் விநியோக மேற்பார்வையை மேம்படுத்த புதிய மூத்த நிர்வாகிகளை தேடி வருகிறது.
மேற்கண்ட ஸ்டார்ட்அப்கள், வளர்ச்சி நிலைகளில் வரும் சவால்களை சமாளிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது பெரிய யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களில் இருந்து வரும் துறை சார்ந்த நிபுணர்களையும் மற்றும் சவாலான சூழ்நிலைகளை சரிசெய்யும் வல்லுநர்களையும் தேடுகின்றன.
இந்த உயர் பதவிகளுக்கான சராசரி சம்பளம் ₹80 லட்சம் முதல் ₹4 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர, வெளிநாடுகளில் பணியாற்றி இந்தியா திரும்பிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
ஒரு பக்கம் படித்து பட்டம் பெற்றவர்கள் வேலையில்லாமல் இருக்கும் கூட்டம், இன்னொரு பக்கம் வேலையிலிருந்து திடீரென நீக்கப்பட்டதால் வாய்ப்புகள் தேடி அலையும் கூட்டம் என்று இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில் சம்பளத்திற்கு வேலைக்கு ஆட்கள் எடுக்காத நிறுவனங்கள் தயாராகி வருவது ஒரே நாட்டில் காணப்படும் ஆச்சரியமான சம்பவங்களாக பார்க்கப்படுகிறது.